வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை கூடாது


வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை கூடாது
x
தினத்தந்தி 29 July 2017 12:00 AM GMT (Updated: 2017-07-29T03:07:13+05:30)

வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை புகார் வழக்கு ஒன்றை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து உள்ளதாவது:-

வரதட்சணை கொடுமை புகார் தொடர்பான வழக்குகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பெண்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டப்பிரிவு தற்போது தவறாக பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் சிலர் தங்கள் கணவர் குடும்பத்தினரை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

வரதட்சணை புகார் கொடுத்தால் உடனே கைது செய்வது தவறான செயல் ஆகும். குற்றத்தன்மையை ஆராய்ந்த பிறகே போலீசாரோ அல்லது கீழ்க்கோர்ட்டோ கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரதட்சணை புகார் தொடர்பாக போலீசார் உடனே தன்னிச்சையாக கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. இதற்காக மாவட்டந்தோறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப நல அமைப்புகளை உருவாக்க வேண்டும். 3 பேர் கொண்ட அந்த அமைப்பில் சட்ட நிபுணர்கள், சமூக சேவகர்கள், உயர் அதிகாரிகளின் மனைவிகளை நியமிக்கலாம்.

குடும்ப நல அமைப்புகள் முன்பு புகாருக்கு ஆளான குடும்பத்தினர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கலாம். குடும்ப நல அமைப்பு தங்களிடம் வரும் புகார்களை ஒரு மாதத்துக்குள் விசாரித்து அதன் அறிக்கையை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கோ அல்லது மாஜிஸ்திரேட்டுக்கோ அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையை வைத்து குற்றம் நடந்தது உண்மை என தெரியவந்தால் அதன் பிறகு கைது நடவடிக்கை எடுக்கலாம்.

குடும்ப நல அமைப்புகளை ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆய்வு செய்து அதை மாற்றி அமைப்பது, அவர்களுக்கு சட்ட அறிவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை மாவட்ட கோர்ட்டு செய்ய வேண்டும். அந்த அமைப்புக்கு மதிப்பூதியத்தை மாவட்ட கோர்ட்டு நிதியில் இருந்து வழங்கலாம். இந்த ஆலோசனையில் திருத்தம் செய்வது அல்லது கூடுதல் ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட தங்கள் பரிந்துரையை தேசிய சட்ட ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அறிக்கையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


Next Story