மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை புகழும் பாகிஸ்தான் பெண்


மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை புகழும் பாகிஸ்தான் பெண்
x
தினத்தந்தி 28 July 2017 10:30 PM GMT (Updated: 28 July 2017 9:53 PM GMT)

சிறப்பான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான பாகிஸ்தான் நோயாளிகள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.

புதுடெல்லி,

சிறப்பான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான பாகிஸ்தான் நோயாளிகள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர். இதற்காக விசா வேண்டி விண்ணப்பிக்கும் பாகிஸ்தானியர்கள், அந்த நாட்டு வெளியுறவு மந்திரியின் பரிந்துரை கடிதத்தை நிச்சயம் பெற்று வர வேண்டும் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். எனவே சில சமயங்களில் பாகிஸ்தானியர்களால் குறிப்பிட்ட நேரத்தில் விசா பெற முடியாமல் போய்விடுகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த ஹைஜாப் ஆசிப் என்ற பெண்ணுக்கும் விசா கிடைப்பதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. கல்லீரல் பாதிப்பால் மிகுந்த அவதிப்பட்டு வந்த அந்த பெண் இது குறித்து சுஷ்மா சுவராஜின் உதவியை நாடினார். விசா நடவடிக்கைகளில் உடனடியாக தலையிட்டு இந்தியா வர உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை கனிவாக பரிசீலித்த சுஷ்மா, இது குறித்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாவலேவை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி ஹைஜாப் ஆசிப்புக்கு விசா வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

சுஷ்மாவின் இந்த செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த ஹைஜாப், அவருக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘பிரியமான அம்மா... உங்களை நான் எப்படி அழைப்பேன்? சூப்பர் பெண்மணி...? கடவுள்....? உங்கள் பெருந்தன்மையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. லவ் யூ அம்மா. பொங்கி வரும் கண்ணீரால் உங்களை புகழ வார்த்தைகள் வரவில்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர், ‘உங்கள் (சுஷ்மா) மீது அதிகமான அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். நீங்கள் மட்டும் எங்கள் பிரதமராக இருந்திருந்தால், இந்த நாடு (பாகிஸ்தான்) மாறியிருக்கும். உங்களுக்கு நிகரான தகுதி பாகிஸ்தானுக்கு எப்போதும் இல்லை’ எனவும் கூறியுள்ளார்.


Next Story