டெல்லி மேல்–சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


டெல்லி மேல்–சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 28 July 2017 11:45 PM GMT (Updated: 2017-07-29T05:05:31+05:30)

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கடத்துவதாக கூறி டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கடத்துவதாக கூறி டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

குஜராத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8–ந் தேதி டெல்லி மேல்–சபைக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் குஜராத்தில், நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர். நேற்று மான்சிங் சவுகான், சகானாபாய் சவுத்ரி, ராம்சிங் பார்மர் ஆகிய மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவினர்.

இந்த விவகாரத்தை டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று எழுப்பினர். பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் எழுந்து, ‘‘குஜராத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. போலீசாரை வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்தி பா.ஜனதாவில் சேர்க்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டினர்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களில் பலர் சபையின் மையப்பகுதிக்கு சென்று மோடி அரசுக்கு எதிராக பலத்த கோ‌ஷமும் எழுப்பினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சி எம்.பி.க்கள், ‘‘உங்கள் கட்சியின் பிரச்சினையை இங்கே ஏன் எழுப்புகிறீர்கள்’’ என்று கூச்சலிட்டனர். இதனால் சபையில் கடும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து சபை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் சபை கூடியதும், இதே பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபையின் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களை தங்களது இருக்கைகளில் சென்று அமரும்படி கூறினார்.

ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து சபையின் மையப்பகுதியில் நின்றவாறே அமளியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மற்ற கட்சியினரும் இணைந்து கொண்டனர். ஆளும் கட்சியினர் எதிர் கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இதையடுத்து சபை அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் 2.30 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது இதே பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

அப்போது பாராளுமன்ற விவகார மந்திரி நக்வி, ‘‘சபையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒழுக்கமின்றி நடந்துகொள்கின்றனர். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவது தேர்தல் கமி‌ஷனின் வேலை. இதில் ஏதாவது பிரச்சினை என்றால் தேர்தல் கமி‌ஷனைத்தான் அவர்கள் அணுக வேண்டும்’’ என்றார்.

அப்போது குலாம்நபி ஆசாத், சபையின் துணைத்தலைவரிடம், ‘‘அரசியல் சாசனத்தை காக்கவேண்டியது சபை தலைவரின் கடமை. ஓட்டுப்போடும் எம்.எல்.ஏ.க்களை போலீஸ் துணையுடன் கடத்துகின்றனர். எனவே சபையின் தலைமைதான் தேர்தல் கமி‌ஷனுக்கு இதுபற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதே கருத்தை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியும் வலியுறுத்தினார்.

துணைத்தலைவர் பி.ஜே.குரியன், ‘‘தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தும்படி தேர்தல் கமி‌ஷனுக்கு சபைத்தலைவர் உத்தரவு எதையும் பிறப்பிக்க தேவையில்லை. அதை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். நீங்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் தேர்தல் கமி‌ஷனை அணுகலாம்’’ என்றார்.

இதனால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் சபையின் மையப்பகுதிக்கு சென்று மோடி அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

பதிலுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது. இதைத்தொடர்ந்து சபையை நாள் முழுக்க துணைத்தலைவர் ஒத்திவைத்தார்.


Next Story