கர்நாடகாவில் ஒரு கூவத்தூர்: குஜராத் அரசியலில் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கர்நாடகா அழைத்து வரப்பட்டு, ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், குஜராத்திலிருந்து ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அக்கட்சியிலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிலர் ஆளும் கட்சியான பா.ஜ.க வில் இணைந்துள்ளனர்.
அந்தக் கட்சியிலிருந்து மேலும் பலர் இதே முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ-க்கள் அவசர அவசரமாக நேற்று இரவு குஜராத்தில் இருந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இன்று காலை கர்நாடகா வந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று காலை மேலும் 10 எம்.எல் ஏக்களும் அழைத்து வரப்பட்டனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி குஜராத்தில் உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஆகஸ்ட் 8-ம் தேதிதான் குஜராத் திரும்புவார்கள் எனக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதேபோன்று கூவத்தூர் சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story