தேசிய செய்திகள்

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; அதிஉயர் உஷார் நிலையில் ராணுவம் + "||" + India deploys more troops along China border in Sikkim, Arunachal

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; அதிஉயர் உஷார் நிலையில் ராணுவம்

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; அதிஉயர் உஷார் நிலையில் ராணுவம்
டோக்லாமில் மோதல் நிலவும் நிலையில் சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையானது உயர்த்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிக்கிம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. 

இதனால் இந்தியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என சீனா மிரட்டி வருகிறது. இதனால் சுமார் 2 மாதங்களாக அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே டோக்லாம் பகுதியில் பூடான் சார்பில் இந்தியா நுழைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள சீனா, இதைப்போல காஷ்மீரில் பாகிஸ்தான் சார்பில் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. எனவே டோக்லாம் விவகாரம் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாக புகைந்து வருகிறது. பூடான் இந்தியாவிற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. அண்டை நாடுகள் அளிக்கும் எவ்வித சவாலையும் சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக ராணுவ மந்திரி அருண் ஜெட்லி மீண்டும் உறுதிபட தெரிவித்துவிட்டார். 

டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே டோக்லாம் அருகே உள்ள கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற இந்திய ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என தகவல்கள் வெளியாகியது. அதேபோன்று சீனா தன்னுடைய படை வீரர்கள் எண்ணிக்கையை 800 ஆக உயர்த்தி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையானது உயர்த்தப்பட்டு உள்ளது என மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது. சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிஉயர் உஷார் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. சுக்னாவில் இருந்து இந்திய பாதுகாப்பு படை டோக்லாம் நோக்கி நகர்ந்து உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. இருப்பினும் எல்லையில் படை வீரர்கள் எண்ணிக்கை எவ்வளவு உயர்த்தப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என பிடிஐ செய்தி தெரிவித்து உள்ளது. 

ஆப்ரேஷன் நடவடிக்கையை வெளியிடக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும் மோதல் போக்கு நிலவி வரும் டோக்லாம் பகுதியில் படை வீரர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் எச்சரிக்கை மட்டமானது உயர்ந்து உள்ளது.