‘முத்தலாக்’ சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


‘முத்தலாக்’ சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:45 PM GMT (Updated: 22 Aug 2017 8:51 PM GMT)

3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறும் வழக்கம் உள்ளது. இதை எதிர்த்து சாயிராபானு என்பவர் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் 5 பேர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 7 மனுக்களையும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோகின்டன் பாலி நாரிமன், உதய் உமேஷ் லலித், அப்துல் நஜீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் சீக்கியர், கிறிஸ்தவர், பார்சி, இந்து, முஸ்லிம் மதங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த மே 11–ந்தேதி தொடங்கி, வெவ்வேறு நாட்களில் மொத்தம் 7 நாட்கள் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதில், சாயிராபானு உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்களின் தரப்பில் வக்கீல்கள் கபில் சிபல், ராம் ஜெத்மலானி, ஆனந்த் குரோவர், சல்மான் குர்ஷித், ஆரிப் முகமது கான், இந்திரா ஜெய்சிங், அமித் சிங் சட்டா, பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுதாரர்கள் தரப்பில் இவர்கள், முத்தலாக் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. பெண்களின் அடக்குமுறைக்கு வழிவகுப்பது ஆகும். மேலும் பெண் உரிமைக்கும் எதிரானது. இதனால் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்ற வாதங்களை முன்வைத்தனர்.

மத்திய அரசு தரப்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராயினர்.

மத்திய அரசு தரப்பில், ‘இது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைக்கு இடையில் உள்ள வழக்கு அல்ல. மதத்துக்கு உள்ளே பெண்களின் உரிமைக்கான போராட்டமாகும். ‘முத்தலாக்’குக்கு எதிரான சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. முத்தலாக் என்ற வழக்கம் 1,400 ஆண்டுகளாக ஒடுக்கி வைக்க உதவிய நடைமுறை. முத்தலாக் நடைமுறையை புறமொதுக்கிய நாடுகளிலும், இஸ்லாம் செழித்து வளர்ந்து வருகிறது. நம்முடையது மதச்சார்பற்ற அரசியல் சட்டமாகும். அனைத்து மதங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் அதே வேளையில் அடிப்படை உரிமையையும் பாதுகாக்கவேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த மே 18–ந்தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நேற்று 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு 395 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

5 நீதிபதிகள் அமர்வில், 3 நீதிபதிகள் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஜீர் ஆகிய இருவரும் இது தனிச்சட்டம் தொடர்புடையது. இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். என்றபோதிலும் 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதிகள் அளித்த முத்தலாக் நடைமுறை செல்லாது, அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்ற தீர்ப்பே இறுதி தீர்ப்பாக அமைந்தது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:–

முத்தலாக் நடைமுறை தவறானதாக இருந்தாலும் இந்த தனிச்சட்டத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. 6 மாதங்களுக்கு இந்த முத்தலாக் நடைமுறையை நிறுத்தி வைக்கவேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்து முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும். ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்றால் அரசாங்கம் சட்டத்தை இயற்றும் வரை முத்தலாக் மீதான தடை தொடரும்.

மேலும் அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் ‌ஷரியத் சட்டத்தையும் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமையவேண்டும்

இவ்வாறு அவர்கள் தங்களது தீர்ப்பில் கூறி இருந்தனர்.

மற்ற 3 நீதிபதிகளான குரியன் ஜோசப், ரோகின்டன் பாலி நாரிமன் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று மாறுபட்டு தீர்ப்பு வழங்கினர்.

நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், யு.யு.லலித் ஆகியோருடைய தீர்ப்பில், ‘‘முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது இஸ்லாமிய மதத்தில் இல்லை. எனவே முத்தலாக்கை ஏற்றுக்கொள்ள இயலாது. தவிர இது, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 14க்கு எதிரானது. இது அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் அமைந்துள்ளது. அதனால் இது செல்லத்தக்கதும் அல்ல. எனவே முத்தலாக் நடைமுறையை தடை செய்யவேண்டியது அவசியம் ஆகும்’’ என்று கூறியுள்ளனர்.

நீதிபதி குரியன் ஜோசப் தனது தீர்ப்பில், ‘‘முத்தலாக் நடைமுறை ‌ஷரியத் சட்டத்துக்கு எதிரானது. திருக்குரானில் கூறப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. எனவே இது தடை செய்யப்பட வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

எனவே, பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் அதாவது, நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், யு.யு.லலித், குரியன் ஜோசப் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் முத்தலாக் நடைமுறை மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக் வழக்கு: கடந்து வந்த பாதை

அக்டோபர் 16, 2015 - முத்தலாக் வழக்கு தொடர்பாக விசாரிக்க தனி அமர்வு அமைக்குமாறு இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

மார்ச் 28, 2016 - பெண்கள் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து உயர்மட்ட அளவிலான குழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அக்டோபர் 7, 2016 - மத்திய அரசு முதன் முறையாக முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கருத்து தெரிவித்தது.

பிப்ரவரி 16, 2017 - முத்தலாக் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மார்ச் 30, 2017 - மதம் சார்ந்த முக்கியமான இந்த வழக்கை மே 11-ந் தேதி முதல் தனி அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மே 12, 2017 - முஸ்லிம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறை மோசமானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மே 15, 2017 - முஸ்லிம் பெண்கள் திருமணம் தொடர்பான புதிய சட்டத்தை கொண்டு வர தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்தது.

மே 18, 2017 - அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

ஆக 22, 2017- முத்தலாக் முறை சட்டவிரோதம் என 3 நீதி பதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் இந்த முறைக்கு 6 மாதங்கள் இடைக்கால தடை விதித்தனர்.


Next Story