தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு இல்லை ‘நீட்’ தேர்வு முடிவின்படிதான் மருத்துவ மாணவர் சேர்க்கை


தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு இல்லை ‘நீட்’ தேர்வு முடிவின்படிதான் மருத்துவ மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 22 Aug 2017 11:30 PM GMT (Updated: 2017-08-23T02:12:35+05:30)

‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4–ந் தேதிக்குள் நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு. ஆனால் ‘நீட்’ தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட மசோதாவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த மசோதாவுக்கு அனுமதி பெற்று விடவேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தந்து வந்தது.

எனவே இந்த மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விடும் என தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் 6 மாணவர்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு கடந்த 17–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர் தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் உள்ளிட்டோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

அதில், ‘‘தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்– 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை, அவர்களின் ரேங்க் பட்டியல், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தர வரிசைப்பட்டியல் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், ‘‘அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கையில் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் இடங்களை எப்படி சமமாக பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை 22–ந் தேதி வரை நடத்தவும் தடை விதித்தனர்.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ இது போன்ற பொதுவான ஒரு தேர்வுக்கு, ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது சரியாக இருக்காது. எனவே இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது’’ என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வேறு எந்த தரப்பு வாதங்களையும் அனுமதிக்காமல், ‘‘அப்படி என்றால் தமிழ்நாட்டில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதற்கான தகுதி பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். செப்டம்பர் 4–ந் தேதிக்குள் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

இது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு பெற்று விட வேண்டும் என்று நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து இந்த ஆண்டு எப்படியும் பிளஸ்– 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து விடும் என எதிர்பார்ப்பில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.


Next Story