அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி


அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி
x
தினத்தந்தி 23 Aug 2017 3:05 PM GMT (Updated: 2017-08-23T20:35:20+05:30)

தேர்வில் தன்னை விட தோழி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து கொடுத்துள்ளார் சக மாணவி.

சத்னா,

போலீசார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும் தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா நகரில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னை விட தோழி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு விரட்டும் திரவ மருந்தினை கலந்து கொடுத்துள்ளார்.

இதனை அறியாத தோழி அந்த தண்ணீரை குடித்துள்ளார். அதன்பின் அவருக்கு வாந்தி வந்துள்ளது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் தோழியை அனுமதித்தனர். தற்பொழுது அவரது நிலைமை சீராக உள்ளது.

இதுபற்றி பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து நடந்த விசாரணையில், மாணவி தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து அதனை மற்றொரு மாணவியின் பையில் மறைத்து வைத்த காட்சி பள்ளி கூட அறையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், குற்றவாளியான மாணவி தனது வீட்டில் வைத்து கொசு விரட்டும் மருந்தினை உட்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story