சிறை தண்டனைக்கு எதிராக நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


சிறை தண்டனைக்கு எதிராக நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 23 Aug 2017 10:30 PM GMT (Updated: 2017-08-24T01:03:09+05:30)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி வகித்தபோது பல்வேறு நீதிபதிகள் ஊழல் செய்வதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பகிரங்கமாக கடிதங்கள் எழுதினார்.

இதனால் அவர் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக கடந்த ஆண்டு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அங்கிருந்தும் அவர் தொடர்ந்து நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார். பல உத்தரவுகளையும் பிறப்பித்தார். இதனால் சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கடந்த மே மாதம் 9–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அமர்வு சி.எஸ்.கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டு அதை ஏற்கவில்லை. இதனால் தலைமறைவான அவரை கோவை நகரில் கொல்கத்தா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக கொல்கத்தா ஐகோர்ட்டில் சி.எஸ்.கர்ணன் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி(பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது கர்ணனின் வக்கீல் மேத்யூஸ் நெடும்பரா வாதிடுகையில், ‘‘மே மாதம் 9–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதி கொள்கை அடிப்படையில் அமையவில்லை. எனவே இது கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் கீழ் வராது. இது அரசியல் சாசனத்துக்கும் எதிரானது’’ என்றார்.

அவருடைய வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின்னர், இது தொடர்பாக நீதிபதிகள் 35 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினர்.

அதில், ‘இது தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டது. ஆனால் அதே காரணங்களை குறிப்பிட்டு இப்போதும் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இது கோர்ட்டை முற்றிலும் திசை திருப்பும் செயல் ஆகும். இதை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story