ராஜீவ் கொலைக்கு பயன்படுத்திய வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கை


ராஜீவ் கொலைக்கு பயன்படுத்திய வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2017 10:30 PM GMT (Updated: 23 Aug 2017 7:33 PM GMT)

ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது குறித்து கண்டறிய ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை 1997–ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது.

இந்த முகமை, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறது.

இந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘1997–ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை கடந்த பல ஆண்டுகளாக எவ்வித இலக்கும் இன்றி செயல்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் என்னை பற்றியும் இதில் கூறப்பட்டு இருக்கிறது. அதில் என்னதான் கூறப்பட்டு உள்ளது என்ற தகவல் இன்றி முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 17–ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “தற்போது சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றி ஒன்றும் கூறவில்லை. மேலும் பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை என்ன கண்டுபிடித்தது என்பது பற்றி தெரிவிக்கவேண்டும்’’ என்றனர்.

அத்துடன், இதில் பேரறிவாளன் தொடர்பு படுத்தப்பட்டு உள்ளதால் இந்த கேள்விக்கு சிறப்பு விசாரணை முகமை பதில் அளிக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இதன் அடிப்படையில் நேற்று ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகல் ஒன்றை ‘சீல்‘ வைக்கப்பட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


Next Story