டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்


டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
x
தினத்தந்தி 23 Aug 2017 10:45 PM GMT (Updated: 23 Aug 2017 7:40 PM GMT)

டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம், அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி,

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் மொரிசியஸ் நாட்டில் இருந்து நிதி திரட்ட அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாகவும், இதற்காக அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கும், வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேருக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

விசாரணைக்காக சி.பி.ஐ. முன்பு கார்த்தி சிதம்பரமும் மற்ற 4 பேரும் ஆஜர் ஆகாததால் அவர்களை தேடப்படும் நபர்களாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 10–ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்தது. விசாரணைக்காக சி.பி.ஐ. முன்பு ஆஜர் ஆகாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது. அதன்பிறகு, விசாரணைக்காக 23–ந் தேதி (நேற்று) சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு 18–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆவதற்காக கார்த்தி சிதம்பரம் நேற்று காலை 10.50 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அவரது வக்கீலும் வந்தார்.

அங்கு விசாரணை அதிகாரிகள் முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

இரவு 7 மணி வரை சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

விசாரணைக்காக மீண்டும் வருகிற 28–ந் தேதி ஆஜராகுமாறு அவருக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டு உள்ளது.

கார்த்தி சிதம்பரத்துடன் நேற்று அவரது வக்கீலும் வந்து இருந்தார். விசாரணையின்போது வக்கீல் உடன் இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தால், அவர் அருகில் உள்ள அறையில் அமர்ந்து இருந்தார்.


Next Story