கர்நாடக அரசின் ‘‘மேகதாது அணை திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’’


கர்நாடக அரசின் ‘‘மேகதாது அணை திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’’
x
தினத்தந்தி 23 Aug 2017 11:45 PM GMT (Updated: 2017-08-24T01:32:29+05:30)

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

கர்நாடகம் மற்றும் கேரள அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் இறுதி வாதம் 7–வது நாளாக நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள்.

கடந்த 17–ந் தேதியன்று தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின் போது கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதில் ஆட்சேபணை ஏதும் இல்லை என்று கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சை உருவானது. பல்வேறு அரசியல் கட்சிகளும், காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில் நேற்று தமிழக அரசு தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் சேகர் நாப்டே, அந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் தனது வாதத்தை முன்வைத்தார்.

அவர் வாதாடுகையில், ‘‘எங்கள் தரப்பில் நாங்கள் ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறோம். கர்நாடக பகுதியில் எந்தவிதமான புதிய அணைக்கட்டு திட்டத்தையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. அனுமதிக்கவும் செய்யாது. அங்கு புதிதாக அணை கட்டினால் புதிய பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்படும். எனவே மேகதாது திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறாம்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வாதாடுகையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் புதிய பயிர்சாகுபடி மற்றும் நீர்ப்பாசன பகுதிகளை குறிக்கும் போது காவிரி நடுவர் மன்றம் பெருமளவில் தவறு செய்து உள்ளது. தமிழ்நாடு பகுதியில் பாசன பகுதியை குறைத்துள்ள அதே நேரத்தில், கர்நாடக பகுதியில் பாசன பகுதி மற்றும் சாகுபடி செய்யும் நிலப்பரப்பை அதிக அளவில் காட்டி உள்ளது நடுவர் மன்றம். இது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான சமன்பாட்டு கொள்கைக்கு மாறுபட்டு உள்ளது.

நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடகம் எந்த நிலையிலும் மதித்து நடக்கவில்லை. காவிரி நீரை கர்நாடகம் அதிகமாக பயன்படுத்திக் கொள்வதால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

நடுவர் மன்றம் கர்நாடகத்தின் தேவைக்கு அதிகமாக 98 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்கி உள்ளது. இது உடனடியாக குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நடுநிலை கடைப்பிடிக்கப்படும் சூழல் உருவாகும்.

கர்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 18.85 லட்சம் ஏக்கர் பாசன பகுதியில் இருந்து 3.44 லட்சம் ஏக்கர் நிலத்தை இந்த கோர்ட்டு குறைக்க வேண்டும்.

மேலும் ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் உள்ள தண்ணீரை நிரந்தர பயிர்கள் தவிர வேறு பயிர்களின் சாகுபடிக்கு கர்நாடகம் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு சேகர் நாப்டே தன் வாதத்தின் போது கூறினார்.

அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சேகர் நாப்டே, ‘‘கர்நாடகத்தில் ஏற்கனவே 1500–க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. அவற்றின் கொள்ளளவு குறித்த எந்த தகவலையும் கர்நாடகம் தர மறுக்கிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகம் புதிதாக அணை கட்டினால் அது மேலும் பல்வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’’ என்று கூறினார்.

வழக்கு விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.


Next Story