ரெயிலில் இருந்து விழுந்த பயணியை காப்பாற்றாமல் மற்றொரு ரெயிலில் தூக்கி போட்ட போலீஸ்


ரெயிலில் இருந்து விழுந்த பயணியை காப்பாற்றாமல் மற்றொரு ரெயிலில் தூக்கி போட்ட போலீஸ்
x
தினத்தந்தி 24 Aug 2017 1:53 PM GMT (Updated: 24 Aug 2017 1:53 PM GMT)

மும்பையில் புறநகர் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை போலீசார் காப்பாற்றாமல் மற்றொரு ரெயிலில் தூக்கி போட்ட சி.சி.டி.வி. காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன.

மும்பை,

நவி மும்பையில் நேற்று அதிகாலை 1 முதல் 1.15 மணியளவில் சன்பதா ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  புறநகர் ரெயில் ஒன்று வேகமுடன் சென்று கொண்டிருந்தபொழுது அதில் இருந்து பயணி ஒருவர் தவறி நடைமேடையில் விழுந்துள்ளார்.

அங்கு பணியில் இருந்த அரசு ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் 2 காவலர்கள் காயமடைந்த பயணியின் அருகில் சென்றுள்ளனர்.  அவர்கள் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சைக்கு வழி செய்யாமல், அடுத்து வந்த ரெயிலில் அவரை தூக்கி போட்டு விட்டனர்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.  அவை சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த நாள் பன்வேல் பகுதியில் அந்த ரெயிலில் காயமடைந்த பயணி கிடந்துள்ளார்.  அவரை கண்ட மற்ற பயணிகளின் உதவியுடன் அந்த பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  ஆனால் அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து, போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.  மற்ற இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story