பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு; ஆதரவாளர்கள் வீடு செல்லுமாறு குர்மீத் ராம் கோரிக்கை


பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு; ஆதரவாளர்கள் வீடு செல்லுமாறு குர்மீத் ராம் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2017 3:57 AM GMT (Updated: 2017-08-25T09:27:41+05:30)

பலாத்கார வழக்கில் சிபிஐ கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளநிலையில் குவிந்துவரும் ஆதரவாளர்களை வீடு செல்லுமாறு குர்மீத் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சண்டிகார்,

தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், கடந்த 1999-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றம் இன்று மதியம் 2 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளது. குர்மீத் ராமிற்கு அரியானா, சண்டிகார், பஞ்சாப் மாநிலங்களில் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர். குர்மீத் சிங்கின் அமைப்பில் ஏராளமானோர் இருப்பதால் தீர்ப்பை அடுத்து அங்கு வன்முறை வெடிக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்ச்குலா நகரில் உள்ள தேரா அமைப்பின் மண்டபத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் தொடர்ந்து குவிந்து வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் குவிந்துவரும் ஆதரவாளர்களை வீடு செல்லுமாறு குர்மீத் கோரிக்கை விடுத்து உள்ளார். 

குர்மீத் ராம் ரஹீம் சிங் வெளியிட்டு உள்ள வீடியோவில் “என்னுடைய ஆதரவாளர்கள் பஞ்ச்குலாவிற்கு வரக்கூடாது. பஞ்ச்குலாவிற்கு வந்து உள்ள ஆதரவாளர்கள் தங்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், அமைதியை பராமரிக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்து உள்ளார். 

Next Story