அரியானா, பஞ்சாப், சண்டிகார் அதிஉஷார்; சண்டிகார் கிரிக்கெட் மைதானம் தற்காலிக சிறையாக்கப்பட்டது


அரியானா, பஞ்சாப், சண்டிகார் அதிஉஷார்; சண்டிகார் கிரிக்கெட் மைதானம் தற்காலிக சிறையாக்கப்பட்டது
x
தினத்தந்தி 25 Aug 2017 4:53 AM GMT (Updated: 25 Aug 2017 4:53 AM GMT)

குர்மீத் ராமுக்கு எதிரான பலாத்கார வழக்கில் சிபிஐ கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி மூன்று மாநிலங்களில் பாதுகாப்பு அதிஉஷார் படுத்தப்பட்டு உள்ளது.



சண்டிகார், 

தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், கடந்த 1999-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்குகிறது. நீதிமன்றம் இன்று மதியம் 2 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளது. குர்மீத் ராமிற்கு அரியானா, சண்டிகார், பஞ்சாப் மாநிலங்களில் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர். தீர்ப்பை அடுத்து வன்முறை வெடிக்கும் என அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகார் மாநிலங்களில் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தேரா அமைப்பின் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக குவிந்தது மேலும் பதட்டத்தை அதிகரிக்க செய்து உள்ளது. இதற்கிடையே அரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகார் மாநிலங்களில் 72 மணி நேரங்களுக்கு மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவையானது துண்டிக்கப்படுகிறது. ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் என 50 ஆயிரத்திற்கும் அதிகமான படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பஞ்ச்குலா,  சிர்சாவில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை நேரிடாத வண்ணம் அடுத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. குர்மீத் ராமின் ஆதரவாளர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க தவறிய அரியானா மாநில பா.ஜனதா அரசை நேற்று ஐகோர்ட்டு கடிந்துக் கொண்டது. மத்திய உள்துறை அமைச்சகமும் தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்படும் நிலையில் கைது நடவடிக்கையும் தொடங்கும். இதற்காக சண்டிகார் கிரிக்கெட் மைதானம் தற்காலிக சிறையாக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பிற இடங்களிலும் முன்ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story