குர்மீத், கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி சி.பி.ஐ. கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


குர்மீத், கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி சி.பி.ஐ. கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Aug 2017 12:00 AM GMT (Updated: 25 Aug 2017 9:36 PM GMT)

‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் மீது தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தில் சண்டிகாரில் இருந்து 260 கி.மீ. தொலைவில் உள்ள சிர்சாவில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பினை நிறுவி, அதன் தலைவராக விளங்குபவர் குர்மீத் ராம் ரகீம்சிங் (வயது 50). ஆன்மிக தலைவர், சமூக சீர்திருத்தவாதி, நடிகர், டைரக்டர், பாடகர் என பல முகங்களை கொண்டவர்.
பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும், சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பல கோடி பேரை ஆதரவாளர்களாக கொண்டுள்ள இவர், அதிமுக்கிய பிரமுகர்களுக்கான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தார்.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-ம் ஆண்டு, இவர் தனது ஆசிரமத்தை சேர்ந்த 2 பெண்களை கற்பழித்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு, 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு மொட்டைக் கடிதம் சென்றது.
அந்த மொட்டை கடிதத்தை ஆராய்ந்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக சிர்சா மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த விசாரணையில், குர்மீத் ராம் ரகீம்சிங் பலாத்காரத்தில் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. 5 ஆண்டுகள் விசாரணை நடத்தி 2007-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கலானது.

2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அம்பாலாவில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டு, குர்மீத் மீது கற்பழிப்பு, மிரட்டல் குற்றங்களுக்காக இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 376 மற்றும் 506 படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

2011-ம் ஆண்டு, ஏப்ரலில் அம்பாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு, சண்டிகார் புறநகரான பஞ்ச்குலாவுக்கு இடமாற்றம் ஆனது. கடந்த ஜூலை மாதம் முதல் இந்த வழக்கு சூடு பிடித்தது.

தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. சென்ற 17-ந் தேதி விசாரணை முடிவுக்கு வந்தது. அதையடுத்து தீர்ப்பு 25-ந் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பையொட்டி தகாத சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என அறிந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோர்ட்டு வளாகத்தை சுற்றிலும் ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பதற்றமான சூழல் உருவானதால் நிலைமையை சமாளிக்க ஆயுதங்களையோ, பலத்தையோ பயன்படுத்துமாறு அரியானா மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக சிர்சாவில் இருந்து தனது வாகன அணிவகுப்புடன் குர்மீத் காலை 9 மணிக்கு புறப்பட்டார். அந்த வாகன அணிவகுப்பில் 200 கார்கள் இடம் பெற்றிருந்தன.

சிர்சாவில் உள்ள ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைமையகத்தில் அவரது ஆதரவாளர்கள் 5 லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள், ‘குர்மீத் அங்கிருந்து வெளியே போகக்கூடாது’ என கூறி கதறினர். கண்ணீர் சிந்தினர்.
சாலையின் இரு மருங்கிலும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டனர். எல்லோரும் குர்மீத் மீதான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
பஞ்ச்குலா வந்து சேர்ந்த அவர் மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அப்போது நீதிபதி ஜெகதீப் சிங், “இந்த வழக்கில் குர்மீத் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி” என தீர்ப்பு அளித்தார்.

அத்துடன், அவருக்கு தண்டனை என்ன என்பது குறித்து 28-ந் தேதி (நாளை மறுதினம்) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
அதைத் தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், குர்மீத்தை கைது செய்தனர். அவர் அரசின் ஹெலிகாப்டர் மூலம் ரோடக்கில் உள்ள சிறைக்கு அழைத்துச்சென்று அடைக்கப்பட்டார்.


Next Story