குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு 5 மாநிலங்களில் கலவரம் 1000 பேர் கைது


குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு 5 மாநிலங்களில் கலவரம்  1000 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2017 6:34 AM GMT (Updated: 26 Aug 2017 6:33 AM GMT)

மத தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கபட்டதும் 5 மாநிலங்களில் கலவரம் பரவியது இது தொடர்பாக 1000 பேர் கைது செய்யபட்டு உள்ளனர்.

சண்டிகார்,

கற்பழிப்பு வழக்கில் மத தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால்  அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஐ தாண்டி உள்ளது.  350 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் அங்கு பதட்டமான நிலையே பெரும்பாலான பகுதிகளில் நீடிக்கிறது.

 பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 24-ம் தேதியிலிருந்து 600க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாபில் உள்ள மாலவுட், பல்லுவானா ரெயில் நிலையங்களுக்கு கலவரக் காரர்கள் தீவைத்தனர். மான்சா பகுதியில் வருமானவரி அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது.

கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இன்று காலையில் கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 80 சதவீத பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது இல்லை. அங்கு தடை உத்தரவும் போடப்பட்டது இல்லை. இப்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 11 மாவட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கலவரம் ஏற்பட்டால் அடுத்த 13 நிமிடங்களில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். தற்போது விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் கலவரம் நீடித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் முழுமையாக இறங்கியுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்த தடைவிதிக்கப் பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூடி நிற்கக்கூடாது, பேனர் வைக்கக் கூடாது, ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. கோஷம் எழுப்பக் கூடாது, ஊர்வலமாக செல்லக் கூடாது, தர்ணா போராட்டம் நடத்தக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் உள்ள 10 மாவட்டங்களில் 85 கம்பெனி ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.

Next Story