அரசியலுக்காக பஞ்ச்குலாவை பற்றி எரியச்செய்து உள்ளீர்கள் அரியானா அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்


அரசியலுக்காக பஞ்ச்குலாவை பற்றி எரியச்செய்து உள்ளீர்கள் அரியானா அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 26 Aug 2017 8:01 AM GMT (Updated: 2017-08-26T13:31:46+05:30)

அரசியலுக்காக பஞ்ச்குலாவை பற்றி எரியச்செய்து உள்ளீர்கள் என அரியானா பா.ஜனதா அரசுக்கு ஐகோர்ட்டு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து உள்ளது.சண்டிகார்,

 
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டு உள்ளது. அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் பதட்டம் நீடித்து வருகிறது.

பாலியல் பலாத்கார வழக்கில் 25-ம் தேதி தீர்ப்பு என்ற நிலையில் சாமியாரின் ஆதரவாளர்கள் சிபிஐ நீதிமன்றம் செயல்படும் பஞ்ச்குலாவில் குவிய தொடங்கினர். அவருடைய ஆதரவாளர்கள் படையெடுப்பது வெளிப்படையாகவே தெரியவந்தது. அவர்கள் தடிகள், கூர்மையான ஆயுதங்களை சேகரிக்கிறார்கள் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அரியானா மாநில அரசு பாதுகாப்பு படைகளை குவித்தது. நேற்றைய வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது. சாமியார் குர்மீத் ராம் சிங் இரு மாநிலங்களில் அரசியலில் முக்கியப்புள்ளியாகவும் உள்ளார். இதனால் அரசுக்கள் அவருக்கு எதிரான நகர்வில் தயக்கம் காட்டுகிறது எனவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு வெளியாகும் நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவே அங்கு குவிய தொடங்கினர். ஆனால் அப்போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கவில்லை. ஏற்கனவே புதன் கிழமை இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு அரியானா அரசை கடுமையாக கடிந்துக் கொண்டது. இவ்வளவு ஆதரவாளர்களை குவியவிட்டது ஏன் கேள்வியை எழுப்பியது. நேற்றும் வன்முறை வெடித்ததும் இருமாநில அரசுக்களுக்கும் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. வன்முறையினால் ஏற்பட்ட சேதம் காரணமாக சாமியாரின் சொத்துக்களை முடக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

 இன்றும் அரசியலுக்காக பஞ்ச்குலாவை பற்றி எரியசெய்து உள்ளீர்கள் என அரியானா பா.ஜனதா அரசுக்கு ஐகோர்ட்டு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து உள்ளது. “அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை பற்றிய எரிய நீங்கள் அனுமதித்து உள்ளீர்கள். போராட்டக்காரர்களிடம் அரசு சரண் அடைந்துவிட்டது,” என கோர்ட்டு கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. இதற்கிடையே வன்முறையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Next Story