குர்மீத்துக்கு தண்டனை விவரம் அறிவிக்க நீதிபதி ரோடக் செல்ல உத்தரவு


குர்மீத்துக்கு தண்டனை விவரம் அறிவிக்க நீதிபதி ரோடக் செல்ல உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-27T01:52:04+05:30)

‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங், கற்பழிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி என நேற்று முன்தினம் பஞ்ச்குலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பு அளித்தார்.

சண்டிகார்,

‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங், கற்பழிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி என நேற்று முன்தினம் பஞ்ச்குலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் 28–ந் தேதி (நாளை) அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை அடுத்து கலவரம் மூண்டதால், பஞ்சாப்–அரியானா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.எஸ். சாரோன் தலைமையில் முழு அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.

அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யபால் ஜெயின் ஆஜராகி வாதிட்டபோது, ‘‘நேற்றைய (நேற்று முன்தினம்) கலவரம் மாநில விவகாரம்’’ என குறிப்பிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘அப்படியென்றால் இந்தியாவில் அரியானா ஒரு அங்கம் இல்லையா? அரசியல் நோக்கங்களுக்காக பஞ்ச்குலா தீப்பற்றி எரிய வேண்டுமா? தேசிய ஒருமைப்பாடு என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. பிரதமர் நாட்டுக்குத்தானே தவிர, பாரதீய ஜனதா கட்சிக்கு அல்ல’’ என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் குர்மீத்துக்கு தண்டனை விவரம் அறிவிக்க, அவர் அடைக்கப்பட்டுள்ள ரோடக் சிறையில் தற்காலிக கோர்ட்டு அறை உருவாக்கவும், நீதிபதியை பத்திரமாக வான்வழியில் அழைத்துச்செல்லவும், கோர்ட்டு ஊழியர்கள் 2 பேர் உடன் செல்லவும் நடவடிக்கை எடுக்குமாறு அரியானா அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிபதி ஜெகதீப் சிங், ரோடக் செல்கிறார்.


Next Story