குர்மீத் சிங்கின் ஆசிரமங்களில் அதிரடி சோதனை அரியானா கலவர சாவு 36 ஆக உயர்வு


குர்மீத் சிங்கின் ஆசிரமங்களில் அதிரடி சோதனை அரியானா கலவர சாவு 36 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 Aug 2017 12:00 AM GMT (Updated: 26 Aug 2017 8:38 PM GMT)

அரியானாவில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பினரின் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

சண்டிகார்,

அரியானாவில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பினரின் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபலமாக விளங்கி வரும் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அவர் குற்றவாளி என நேற்று முன்தினம் அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அவரது தண்டனை விவரம் நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வெளியானதும் குர்மீத் ராம் ரகீம் சிங் ரோடக் மாவட்டத்தின் சுனாரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பும் விலக்கப்பட்டது.

முன்னதாக இந்த தீர்ப்பை அறிவதற்காக பஞ்ச்குலாவுக்கு படையெடுத்திருந்த குர்மீத்தின் ஆதரவாளர்கள், தீர்ப்பை கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர். கடும் ஆவேசத்துக்குள்ளான அவர்கள் பஞ்ச்குலா மற்றும் சாமியாரின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சாவில் வெறியாட்டத்தில் இறங்கினர். வாகனங்களை அடித்து நொறுக்கியும், அரசு சொத்துகளுக்கு தீ வைத்தும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களம் போல ஆகின.

இந்த கலவரம் பின்னர் மெல்ல மெல்ல பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் பரவியது. அத்துடன் நிற்காமல் டெல்லி, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களையும் பதம் பார்த்தது. டெல்லியில் 2 பஸ்களை தீயிட்டு கொளுத்திய ஒரு கும்பல், ஆனந்த் விகார் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த 2 காலி ரெயில் பெட்டிகளையும் தீயிட்டு எரித்தது.

குர்மீத்தின் தொண்டர்கள் அரங்கேற்றிய இந்த வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 29 பேர் சம்பவ இடங்களிலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் பின்னர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.

இதில் வன்முறையின் மையப்புள்ளியாக விளங்கிய பஞ்ச்குலாவில் மட்டும் 29 பேர் பலியாகி உள்ளனர். போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் டெல்லி, ராஜஸ்தானிலும் சில பகுதிகளில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ராணுவமும், துணை ராணுவ வீரர்களும் பல இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அரியானாவில் பல இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட 524 தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 வாகனங்கள், 7 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள், 10 பெட்ரோல் குண்டுகள் உள்பட ஏராளமான பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த கலவரம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நடவடிக்கைகளால் பஞ்ச்குலா மற்றும் சிர்சா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தன. எனினும் அங்கு பதற்றம் நீடித்து வருவதால் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. அங்கு அமைதியை தக்க வைக்க ஏராளமான ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வன்முறை மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால் அரியானா முழுவதும் முழு அடைப்பு போன்ற நிலை காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மக்களை வீட்டிலேயே இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் ராணுவம் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே குர்மீத்தின் ஆசிரமங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவமும், போலீசாரும் இறங்கி உள்ளனர். சிர்சாவில் உள்ள அவரது தலைமை ஆசிரமத்தை பாதுகாப்பு படையினர் நேற்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு தங்கியிருக்கும் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான ஆதரவாளர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதைப்போல சாமியாரின் ஆசிரம கிளைகளில் சோதனை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள 9 கிளைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 2500-க்கும் அதிகமான கம்புகள் மற்றும் ஏராளமான கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அந்த கிளைகளில் இருந்த ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குர்மீத் ஆதரவாளர்களின் இந்த கட்டுக்கடங்காத வன்முறையை தடுக்க தவறியதாக பஞ்ச்குலா துணை கமிஷனரை மாநில அரசு இடைநீக்கம் செய்தது. சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குர்மீத், சாதாரண கைதி போலவே நடத்தப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேரா சச்சா சவுதா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஒடிசாவின் பூரியில் உள்ள குர்மீத்தின் ஆசிரமத்துக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனினும் இந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து இந்த ஆசிரமம் அருகே உள்ளூர்வாசிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குர்மீத் ஆதரவாளர்களின் வன்முறையால் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பஞ்ச்குலா மற்றும் சிர்சாவில் கடும் பதற்றம் நிலவி வருவதாகவும், பிற மாநிலங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி, உளவுத்துறை தலைவர் ராஜீவ் ஜெயின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story