சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லை


சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லை
x
தினத்தந்தி 28 Aug 2017 12:00 AM GMT (Updated: 2017-08-28T03:33:49+05:30)

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை, யாருக்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். இது குர்மீத் ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதில் உள்ளதை பேசுகிறேன்) நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார்.

‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங், கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என பஞ்ச்குலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் மூண்டது. 30–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், பொதுச்சொத்துகளுக்கு பெருத்த சேதங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மதத்தின் பெயரால் நடக்கிற வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது. சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது.

டாக்டர் அம்பேத்கர், நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்துள்ளார். அதில், சட்டத்தின் ஆட்சிக்கு முன் அனைவரும் தலை வணங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு மதத்தை சேர்ந்தவர்களும், குழுவை சேர்ந்தவர்களும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் (இது, குர்மீத் ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடியின் நேரடி எச்சரிக்கையாக அமைந்துள்ளது.) என்று நாட்டு மக்களுக்கும், பெண்களுக்கும் உறுதி அளிக்கிறேன். அத்தகைய சக்திகளை இந்த நாடும் சரி, அரசாங்கமும் சரி சகித்துக்கொள்ளப்போவதில்லை.

அரசியல் சித்தாந்தத்தின் பெயராலும், நம்பிக்கையின் பெயராலும், கலாசாரத்தின் பெயராலும் யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் சகித்துக்கொள்ள முடியாது என நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். சுதந்திர தின உரையின்போதும் கூறி உள்ளேன்.

நீதி தேடுவதற்கு ஒவ்வொருவருக்கும் போதிய வாய்ப்புகளை நமது அரசியல் சாசனம் தந்துள்ளது.

இந்தியா, காந்தியின் தேசம். இந்தியா, புத்தரின் தேசம். நாட்டின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் பட்டேல், ஒற்றுமையையும், தேச ஒருமைப்பாட்டையும் உறுதி செய்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்காக தன்னால் ஆன அனைத்தையும் செய்த சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களுக்குரியது இந்த தேசம்.

மன்னிப்புதான் துணிச்சலானவர்களின் அலங்காரம் என்று நாம் நமது சாஸ்திரங்களிலும், புனித நூல்களிலும் இருந்து கேட்டிருக்கிறோம். யார் ஒருவர் மற்றவர்களை மன்னிக்கிறார்களோ அவர்கள்தான் தைரியசாலிகள். மன்னிப்புதான் மாபெரும் மனிதர்களின் பண்பு என்று மகாத்மா காந்தி எப்போதும் சொல்லி வந்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் வலியுறுத்திப்பேசிய பிற முக்கிய வி‌ஷயங்களின் சாராம்சம் வருமாறு:–

* இந்தியா பண்டிகைகளின் தேசம். அவை பன்முகத்தன்மையைத்தான் நிரப்பும்.

* பண்டிகைகளுக்கு இயற்கையுடன் மாபெரும் தொடர்பு உள்ளது. நமது பண்டிகைகள் பல, நேரடியாக விவசாயிகளுடனும், மீனவர்களுடனும் தொடர்புடையவை.

* தூய்மையை நமது வீடுகளில் மட்டுமல்லாது, கிராமங்களிலும், நகரங்களிலும், மாநிலங்களிலும், ஒட்டுமொத்த தேசத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.

* சுற்றுச்சூழலுக்கு உகந்தவராக நீங்கள் கருதப்படா விட்டால் இன்றைய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டீர்கள்.

* தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, தூய்மையான சுற்றுப்புற சூழலை உருவாக்குவதை மக்கள் ஒரு பிரசார இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும். காந்தி ஜெயந்திக்கு 15 நாட்களுக்கு முன்பாவது இதை தொண்டு அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், சமூக, கலாசார, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், ஊர் தலைவர்கள் எடுத்து செல்ல வேண்டும். இது குறித்து சமூக ஊடகங்கள், கட்டுரைப்போட்டி, குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள் நடத்தலாம். பரிசுகள் வழங்கலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையின்போது வலியுறுத்தி குறிப்பிட்டார்.


Next Story