டெல்லி மேல்–சபையில் இருந்து சரத் யாதவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்


டெல்லி மேல்–சபையில் இருந்து சரத் யாதவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2017 11:00 PM GMT (Updated: 27 Aug 2017 10:03 PM GMT)

பா.ஜனதாவுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டத்தில் சரத் யாதவ் பங்கேற்றதால் ஐக்கிய ஜனதாதளம் அதிருப்தியடைந்துள்ளது.

பாட்னா,

பா.ஜனதாவுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டத்தில் சரத் யாதவ் பங்கேற்றதால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய ஜனதாதளம், அவரை டெல்லி மேல்–சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு வெங்கையா நாயுடுவிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜனதாவுக்கு எதிரான பொதுக்கூட்டம் (பா.ஜனதாவை அகற்றுவோம், நாட்டை காப்போம்) ஒன்றை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடத்தியது. அங்குள்ள காந்தி மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதன்படி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் சரத் யாதவ் மற்றும் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மதசார்பற்ற ஜனதாதளம், தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

எனினும் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் சார்பில் டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மீது மத்திய அரசு அக்கறையின்றி இருப்பதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக பணமதிப்பு நீக்கம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைந்துள்ள நிலையில், பா.ஜனதாவுக்கு எதிரான இந்த கூட்டத்தில் சரத் யாதவ் பங்கேற்றது அந்த கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்றால் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்கு ஐக்கிய ஜனதாதள தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த உத்தரவை மீறி அவர் கூட்டத்தில் பங்கேற்றதால், சரத் யாதவை டெல்லி மேல்–சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய ஐக்கிய ஜனதாதளம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேல்–சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத இருப்பதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி நேற்று கூறினார்.

கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது அரசியல் சட்ட அட்டவணை 10–ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறிய அவர், ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட முப்தி முகமது சயீத் உள்ளிட்ட உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் கட்சியின் நிறுவனர் மற்றும் நீண்டகால தலைவர் என்ற முறையில் அவரை கட்சியில் இருந்து நீக்கமாட்டோம் எனவும், மீண்டும் மேல்–சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் ஐக்கிய ஜனதாதள வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி மேல்–சபைக்கு கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவின் பதவிக்காலம் 2022–ம் ஆண்டுதான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story