வெள்ள சேதத்தை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும்


வெள்ள சேதத்தை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2017 11:15 PM GMT (Updated: 2017-08-28T03:33:52+05:30)

வெள்ள சேதத்தை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய மந்திரி உமாபாரதி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பீகார், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த மழை–வெள்ளத்துக்கு 700–க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், அந்தந்த மாநிலங்களில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு ஏற்படும் வெள்ளச்சேதங்களை தடுக்க, நதிகளை இணைப்பதே தீர்வாக இருக்கும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாத பகுதிகளிலும் இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கனவே வெள்ளப்பெருக்கில் சிக்கி வந்த மாநிலங்கள் தற்போது பேரழிவை சந்தித்துள்ளன.

கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் பெருகிவரும் அதிகப்படியான வண்டல் மண்ணே இந்த வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணம். எனவே இந்த நதிகளை தூர்வார வேண்டியது அவசியமாகிறது. அதைப்போல நதிகளை இணைக்க வேண்டியதும் மிகவும் முக்கியம் ஆகும்.

மத்திய சியாங் அணைத்திட்டம் மூலம் 9,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதுடன், பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும். எனவே இதற்கு அருணாசல பிரதேசம் மற்றும் அசாம் மாநில அரசுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த அணை உடைந்தால் இரு மாநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி விடும் என்ற புரளியினாலேயே இந்த அரசுகள் இதற்கு மறுத்து வருகின்றன.

ஆனால் நம்மிடம் இருக்கும் உலக அளவிலான அனைத்து அறிக்கைகளும், அப்படி ஒரு பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை என கூறுகிறது. இந்த திட்டம் வெள்ளப்பெருக்கை தீவிரமாக தடுக்குமே தவிர, பேரழிவுக்கு உட்படுத்தாது என்பதை மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு உமா பாரதி கூறினார்.


Next Story