பனாஜி இடைத்தேர்தலில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்


பனாஜி இடைத்தேர்தலில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்
x
தினத்தந்தி 28 Aug 2017 4:37 AM GMT (Updated: 2017-08-28T10:06:46+05:30)

பனாஜி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.பனாஜி, 

கோவாவில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனையடுத்து இந்திய பாதுகாப்பு மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல் மந்திரியாக கடந்த மார்ச் 14ம் தேதி பதவியேற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக ஆறு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள பனாஜி தொகுதிக்கும், வால்பொய் தொகுதிக்கும் வருகிற 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பனாஜி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் மனோகர் பாரிக்கரும், வால்பொய் நகரில் விஸ்வஜித் ரானேவும் களமிறக்கப்பட்டனர். 23ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

பனாஜி தொகுதியில் மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார். 4500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார் மனோகர் பாரிக்கர். வெற்றியை அடுத்து மனோகர் பாரிக்கர் பேசுகையில், அடுத்த வாரம் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். வால்பொய் நகரிலும் பாரதீய ஜனதாவே வெற்றி பெற்று உள்ளது. விஸ்வஜித் ரானே 14,684 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரைவிட 9000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 


Next Story