பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத்துக்கு தண்டனை அறிவிப்பு; பஞ்சாப், அரியானாவில் 5 அடுக்கு பாதுகாப்பு


பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத்துக்கு தண்டனை அறிவிப்பு; பஞ்சாப், அரியானாவில் 5 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 28 Aug 2017 5:10 AM GMT (Updated: 2017-08-28T10:39:50+05:30)

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராமிற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளநிலையில் அரியானா, பஞ்சாப்பில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.


சண்டிகார், 


பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. வன்முறையில் 31 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். தேரா ஆதரவாளர்களிடம் இருந்து கம்புகள், கூர்மையான ஆயுதம் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருமாநிலங்களிலும் பாதுகாப்பு உஷார் நிலையிலே வைக்கப்பட்டு உள்ளது. சிரிசாவில் உள்ள தேரா தலைமையகத்தில் சாமியார் குர்மீத் ராமின் ஆதரவாளர்கள் உள்ளனர். அங்கும் பாதுகாப்பு படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்.  

குர்மீத் ராம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் வெள்ளியன்று அரியானா, பஞ்சாப் தவிர்த்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் கலவரம் வெடித்தது. இன்று குர்மீத் ராமிற்கு தண்டனை அறிவிக்கப்படும் என சிபிஐ கோர்ட்டு தெரிவித்தது.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட குர்மீத் ராம்ரகீம்சிங் ரோத்தக்கில் உள்ள சுனரியா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிறையை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். ரோத்தக்கில் வெளியாட்கள் செல்லமுடியாத அளவு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளது. பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அங்கு பெரும் வன்முறை ஏற்படவே ஐகோர்ட்டு, மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ரோத்தக்கில் தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட ஏற்பாடுகளை செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. 

குர்மீத்துக்கு தண்டனை வழங்கப்படும் இன்று, அரியானாவில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரா சச்சா அமைப்பின் 103 வழிபாட்டு மையங்களை போலீசார் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
3 மாநிலங்களிலும் பெரும் பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வன்முறை ஏற்படலாம் என்று கருதப்படும் இடங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியானாவில் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ள ரோத்தக் நகரில் 5 அடுக்கு ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீதிபதி ஜெகதீப் சிங்கை போலீசார் ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவரது ஹெலிகாப்டர் சிறை அருகே தரை இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது. சிறைக்குள் சி.பி.ஐ. கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பை நீதிபதி ஜெகதீப்சிங் வெளியிடுவார். அவரது தீர்ப்பு வெளியிடப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்கு வன்முறையாளர்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப், அரியானா மாநில போலீசாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ரோத்தக் நகரை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அரியானா, பஞ்சாபில் இணையதள சேவைகள், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நாளை மதியம் 12 மணி வரை அரியானாவில் எந்த சமூக ஊடகங்களும் செயல்படாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், டெல்லியிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் நேற்று முதலே கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதல்-மந்திரி கட்டார் வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் போலீசார் உத்தரவுக்கு கட்டுப்படாவிட்டால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப், அரியானாவில் இன்று கடும் பதற்றமான நிலை காணப்படுகிறது. பாதுகாப்பு படைகள் அதிஉயர் உஷார் நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.


Next Story