பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ரகீமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு


பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ரகீமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2017 10:15 AM GMT (Updated: 28 Aug 2017 10:15 AM GMT)

பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ரகீமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.


புதுடெல்லி,

இரு பெண்கள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று கடந்த வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தண்டனை விபரம் திங்கள் அன்று அறிவிக்கப்படும் என கோர்ட்டு அறிவித்தது. இதனையடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுபடி, சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரோத்தக்கில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 

வன்முறை சம்பவங்களை தவிர்க்கும்படி ரோத்தக் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.  பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீதிபதி ஜெகதீப் சிங்கை போலீசார் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டார். 

பிற்பகல் 2:30 மணியளவில் இறுதி வாதம் தொடங்கியது. இருதரப்புக்கும் 10 நிமிடங்கள் நீதிபதி வழங்கினார். சிபிஐ தரப்பில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு அதிகப்பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே அவருடைய பாதுகாப்பு வக்கீல் வாதிடுகையில் குர்மீத் ரகீம் சிங் சமூக பணிகளை செய்து உள்ளார், மக்களுக்காக மேம்பாட்டு திட்டங்களை செய்து உள்ளார். நீதிமன்றம் கனிவுடன் பார்க்கவேண்டும் என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஜெகதீப் சிங், சாமியார் குர்மீத் ராம் ரகீம்மிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையே பாதுகாப்பு படையினர் இரு மாநிலங்களிலும் கண்காணிப்பை உஷார் படுத்தி உள்ளனர். 

குர்மீத் ராம் ரகீமிற்கு சிறையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதும், சிறை உடை வழங்கப்பட்டு அடைக்கப்படுவார். அரியானாவில் பல்வேறு இடங்கள் 144 தடை உத்தரவின் கீழ் உள்ளது. முக்கிய பகுதிகளில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

இரு வாகனங்கள் எரிப்பு

இதற்கிடையே சிரிசாவின் போல்கா பகுதியில் சாமியார் குர்மீத் ராம் ஆதரவாளர்களால் 2 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது.


Next Story