இயற்கை சீற்றங்களின் சேதங்களை குறைக்க தயாராக இருக்க வேண்டும் - நிதிஷ்


இயற்கை சீற்றங்களின் சேதங்களை குறைக்க தயாராக இருக்க வேண்டும் -  நிதிஷ்
x
தினத்தந்தி 28 Aug 2017 8:40 PM GMT (Updated: 2017-08-29T02:10:04+05:30)

பிகார் மாநிலம் இயற்கை சீற்றங்களின் சேதங்களை குறைக்க எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

பட்னா

பிகார் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கக்கூடியதாக இருப்பதால் இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளையும், பாதிக்கப்படக்கூடிய தரப்பாரையும் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் அனைத்து நேரங்களிலும் இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் சேதங்களை குறைக்க முடியும் என்றும் கூறினார். யதார்த்தமான அணுகுமுறை மூலம் இச்சேதங்களை குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

ஆந்திர மாநிலத்தில் மின்னல்களை முன்கூட்டியே அறிய தொழில்நுட்பம் உண்டு அது போலவே பிகாரிலும் அமைக்க வேண்டும் என்றார். அரை மணி நேரத்திற்கு முன்னதாக மின்னல்களை கணித்து கூறுவதால் மக்களை எச்சரிக்க மொபைல் போன்கள் மூலம் எச்சரிக்க முடியும். இதன் மூலம் மனித உயிரிழப்புகளையும்,  சொத்து இழப்புகளையும் தவிர்க்க முடியும். 

நான் பல வெள்ளங்களை பார்த்திருந்தாலும், இது போன்று வெள்ளம் முன் எப்போதும் இல்லாதது என்றார் நிதிஷ். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக ரொக்க மானியத்தை வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஒடிசா முதல்வர் கோரிக்கை

இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே கணிக்கும் டோப்லர் கருவிகளை ஒடிசாவின் மேற்கு பகுதிகளில் அமைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் பல மனித உயிர்களை காப்பாற்ற முடியும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டில் நான்கு டோப்லர் கருவிகளை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இதுவரை இரு டோப்லர் கருவிகளை மாநிலத்தில் பொருத்தியிருந்தாலும் மீதம் இரண்டு கருவிகளையும் விரைவில் பொருத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story