சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்


சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்
x
தினத்தந்தி 29 Aug 2017 12:00 AM GMT (Updated: 2017-08-29T03:18:23+05:30)

சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டு உள்ளன. இதனால் கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.

இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. என்றபோதிலும் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.

இரு நாடுகளும் ஒப்புதல்

இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், “டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து மத்திய அரசு சீனாவுடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம், கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. தற்போது படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன“ என்று கூறப்பட்டு இருந்தது.

பதற்றம் முடிவுக்கு வந்தது

எனினும், இந்த அறிக்கையில் சீனா தனது படைகளை வாபஸ் பெற்று வருகிறதா? என்பது பற்றி வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை.

அதேநேரம் சீன வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சூன்யிங், “இந்திய ராணுவமும், அதன்படை கருவிகளும் அதன் எல்லைக்குள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. டோக்லாம் பகுதியில் நாங்கள்(சீனா) தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவோம்“ என்றார்.

டோக்லாமில் இரு நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து இருப்பதால் கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்து உள்ளது.

பிரிக்ஸ் மாநாடு

வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சீனாவின் ஜியாமென் நகரில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்‘ சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷின்பிங்கும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டுக்கு முன்பாக டோக்லாம் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் விரும்பியதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story