சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 28 Aug 2017 10:45 PM GMT (Updated: 28 Aug 2017 9:52 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஜே.எஸ்.கேஹர் நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த பதவிக்கு அரசியல் அமைப்பின் நடைமுறைப்படி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு இருந்த 64 வயது நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தீபக் மிஸ்ரா ஆங்கிலத்தில் கடவுளின் பெயரால் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

அவர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை பதவி வகிப்பார். அவர் நாட்டின் 45-வது தலைமை நீதிபதி ஆவார்.

தலைவர்கள் பங்கேற்பு

பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குலாம்நபி ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1977-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்துகொண்ட தீபக் மிஸ்ரா, ஒடிசா ஐகோர்ட்டில் சிவில், கிரிமினல், வருவாய், சேவை மற்றும் விற்பனை வரி போன்ற வழக்குகளில் ஆஜராகி வாதாடினார். 1996-ல் ஒடிசா ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாகவும், 1997-ல் மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் பொறுப்பேற்றார்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் ஒரு பெண்ணை கூட்டாக கற்பழித்து கொன்ற வழக்கில் (நிர்பயா வழக்கு) 4 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது மற்றும் சினிமா தியேட்டர்களில் கட்டாயம் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் அமர்வுகளில் தீபக் மிஸ்ராவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வாழ்த்து

தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், “சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள தீபக் மிஸ்ராவை வாழ்த்துகிறேன். அவருடைய பதவிகாலம் மிகச் சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைந்திட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து உள்ளார். 

Next Story