டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் ஆதரவு அணி நிர்வாகிகள் மனு


டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் ஆதரவு அணி நிர்வாகிகள் மனு
x
தினத்தந்தி 29 Aug 2017 6:18 AM GMT (Updated: 29 Aug 2017 6:18 AM GMT)

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்களது கருத்தை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் ஆதரவு அணி நிர்வாகிகள் மனு அளித்து உள்ளனர்.

புதுடெல்லி

டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின்பு முதல் தடவையாக தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் பொதுக் குழுவை கூட்டுவது, தினகரனால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்குவது உள்பட அதிமுக கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது எனவும் தெரிகிறது.

எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து  அமைச்சர்கள்  ஜெயக்குமார், தங்கமணி, சண்முகம்,ஆகியோரும்   மைத்ரேயன் எம்.பி, மனோஜ் பாண்டியனும் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்ரேயன் எம்.பி கூறியதாவது:-

இருகரங்கள் இணைந்த பிறகு ஒன்றாக டெல்லி வந்துள்ளோம். இன்றோ, நாளையோ தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் திட்டம் இல்லை.என கூறினார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சண்முகம்,மைத்ரேயன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அதே நேரம் தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள்  இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

Next Story