பந்தவாக வாழ்ந்த சாமியார் குர்மீத் சிங் விடிய விடிய சிறையில் அழுகை


பந்தவாக வாழ்ந்த சாமியார் குர்மீத் சிங் விடிய விடிய சிறையில் அழுகை
x
தினத்தந்தி 29 Aug 2017 7:21 AM GMT (Updated: 2017-08-29T12:51:38+05:30)

வெளியில் பந்தவாக வாழ்ந்த சாமியார் குர்மீத் சிங் விடிய விடிய சிறையில் அழுதுள்ளார்.

20 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற 50 வயதாகும் சாமியார் குர்மீத் சிங் அரியானா மாநிலம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு கருதி சிறை வளாகத்தில் உள்ள நூலகம் தற்காலிக கோர்ட்டாக மாற்றப்பட்டு நீதிபதி ஜக்தீப் சிங் தண்டனை விவரத்தை அறிவித்தார். தீர்ப்பை வாசித்து முடித்ததும் உடனடியாக அவர் கைதிகள் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். கண்ணீர் சிந்தியவாறே சோகத்துடன் சென்றார். அவருக்கு கைதி எண்.1997 என்று எழுதப்பட்டு இருந்த சாதாரண வெள்ளை நிற கைதி உடை வழங்கப்பட்டது. அதை அவர் அணிந்து கொண்டார்.

மருத்துவ பரிசோதனைக் கும் ஒத்துழைப்பு அளித்தார். ஜெயிலில் அவருக்கு சிறிய அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் தரையில் அமர்ந்து கொண்டார். அதில் அலுமினிய சாப்பாட்டு தட்டு, டம்ளர், மண்பானையில் தண்ணீர் ஆகியவை மட்டுமே இருந்தது.

அவருக்கு முதுகுவலியும், ஒற்றைத்தலைவலியும் இருந்து வந்தது. இதனால் தரையில் அமர முடியாமல் அவதிப்பட்டார். அவர் கற்பழிப்பு குற்றவாளி என்பதால் எந்த சிறப்பு சலுகையும், வசதியும் கிடையாது. ஜெயிலில் நேற்று முதல் நாள் இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தார்.

ஆசிரமத்தில் இருந்த போது அவருக்கு அரியானா மாநில முக்கிய பிரமுகர்களுக்கான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி இருந்தது. அந்த பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளும், மேலும் 2 காவலர்களும் குர்மீத் சிங்கின் அறை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குர்மித் சிங்கின் சிறை நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஜெயிலில் அவருக்கு கஞ்சி போன்ற திரவ உணவு வழங்கப்படுகிறது. இடையில் தண்ணீர் அல்லது பால் வழங்கப்படுகிறது. அதை வாங்கி குடிக்கிறார். ஜெயிலில் மற்ற கைதிகள் யாரிடமும் பேசாமல் மவுன மாக இருக்கிறார்.

பாதுகாப்பு கருதி அவருக்கான சிறை அறையை தேர்வு செய்து ஒப்புதல் பெற்ற பின்பே அதில் அடைத்தோம். இந்த அறை பாதுகாப்பு மிக்கது. மற்ற கைதிகள் யாரும் அவரை நெருங்க முடியாது. சற்று தூரத்தில் 2 காவலர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது உடல் நிலையை கருதி டாக்டர்கள் அல்லது உதவியாளர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதன்படி அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story