மும்பையில் வெள்ளம்; அதி கனமழைக்கு வாய்ப்பு, வெளியே செல்வதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுரை


மும்பையில் வெள்ளம்; அதி கனமழைக்கு வாய்ப்பு, வெளியே செல்வதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 29 Aug 2017 9:28 AM GMT (Updated: 2017-08-29T14:58:23+05:30)

மும்பையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


மும்பை, 

தென் ராஜஸ்தான் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றால் மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஒடிசாவின் வடக்கு மற்றும் அதையொட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மும்பையில் மழை பெய்து வருகிறது. இதே வானிலை அடுத்த 48 முதல் 72 மணி நேரத்துக்கு தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது, இதனால் வெள்ளம் போன்ற நிலையானது அங்கு காணப்படுகிறது.

மும்பையில் கனமழை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக மும்பையில் ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையானது முடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்தது, மரங்கள் முறிந்து விழுந்தது போன்ற விபத்து சம்பவங்களும் பதிவாகி உள்ளது. வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுகிறது. முக்கிய இடங்களில் டிராபிக் சிக்னல்கள் செயல்பட முடியவில்லை. முன்செல்லும் வாகனங்கள் தெரியாத வண்ணம் மழை பெய்கிறது. 

மருத்துவமனைக்குள் தண்ணீர்

கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெடுக்கெடுத்து செல்கிறது. வெள்ள நீரானது பாரெலில் கேஇஎம் மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்து உள்ளது. மருத்துவமனையில் 30 நோயாளிகள் உடனடியாக மேல் தட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். தரைதளத்திற்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சார தடையானது ஏற்பட்டு உள்ளது. அந்தேரி கிழக்கு சாகர் பகுதியில் தண்ணீர் அதிகளவு தேங்கிஉள்ளது. நகரில் காலை 7:30 மணியிலிருந்து 6 மணி நேரங்களில் 100 மில்லி மிட்டர் மழை  பதிவாகி உள்ளது. மும்பையில் மூன்று மார்க்கத்திலும் ரெயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழு

மும்பையில் மூன்று தேசிய பேரிடர் மீட்பு குழுவானது தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புனேயில் இருந்து மேலும் இரண்டு குழுக்கள் மும்பைக்கு புறப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளநீர் தேங்கி உள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மும்பையில் அடுத்த 48 மணி நேரங்களில் 250 மில்லி மிட்டர் மழையானது பதிவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானங்களும் திருப்பி விடப்பட்டு உள்ளது.

Next Story