நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தனி நபரோ, அரசியல் கட்சியோ போராட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை


நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தனி நபரோ, அரசியல் கட்சியோ போராட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை
x
தினத்தந்தி 8 Sep 2017 10:46 AM GMT (Updated: 8 Sep 2017 10:46 AM GMT)

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தனி நபரோ, அரசியல் கட்சியோ போராட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

அரசியல் காரணங்களுக்காக ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன. இது போன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கருத முடிகிறது.

எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இது போன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தனி நபரோ, அரசியல் கட்சியோ போராட்டம் நடத்த சுப்ரீம் தடை விதித்து உள்ளது.

மேலும், தமிழக அரசு சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்   எனவும்   தமிழக தலைமை செயலர், முதன்மை செயலர்  ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தவும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட்டுக்கு எதிராக போராடக்கூடாது  நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

Next Story