டெல்லியில் 7 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் கொல்லப்பட்ட சம்பவம்: அறிக்கை அளிக்க சிபிஎஸ்சி உத்தரவு


டெல்லியில் 7 வயது சிறுவன்  பள்ளி வளாகத்தில் கொல்லப்பட்ட சம்பவம்: அறிக்கை அளிக்க சிபிஎஸ்சி உத்தரவு
x
தினத்தந்தி 9 Sep 2017 10:33 AM GMT (Updated: 9 Sep 2017 10:33 AM GMT)

டெல்லியில் 7 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி, 

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள குருகிராமில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் ஒருவன், பள்ளி கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவன் ஒருவன் இது பற்றி ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தினான். அதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் இறந்து கிடந்த இடத்துக்கு அருகே இருந்த கத்தி போலீசாரால் கைப்பற்றப்பட்டது. மாணவனின் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளி பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாவலர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரத்யுமனின் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுப்பிடிக்குமாறு காவல்துறை அலுவலகத்தில்  சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 சிபிஐ விசாரணை வேண்டும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதற்கிடையில், சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்க சிபிஎஸ்சி, பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

Next Story