உ.பி. விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு 19 பைசா, ரூபாய் 10 மற்றும் 215 வழங்கப்பட்டது


உ.பி. விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு 19 பைசா, ரூபாய் 10 மற்றும் 215 வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 13 Sep 2017 8:51 AM GMT (Updated: 13 Sep 2017 8:51 AM GMT)

உம்ரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சாந்தி தேவி வாங்கிய 1.55 லட்சம் விவசாய கடனுக்கு அரசிடம் இருந்து ரூபாய் 10.37 வழங்கப்பட்டு உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வோம் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. தேர்தலில் அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜனதா ஆட்சி அமைந்தது. மாநிலத்தில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், 2 கோடியே 15 லட்சம் விவசாயிகளின் ரூ.36 ஆயிரத்து 359 கோடி பயிர்க்கடன்களை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் மட்டும் ரூ.30 ஆயிரத்து 729 கோடி ஆகும். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

 உத்தரபிரதேச மாநில அரசின் கடன் தள்ளுபடி திட்டம் கடந்த மாதம் முதல் நடவடிக்கைக்கு வந்து உள்ளது. விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ரூ. 10 மற்றும் 215 என கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. உம்ரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சாந்தி தேவி வாங்கிய 1.55 லட்சம் விவசாய கடனுக்கு அரசிடம் இருந்து ரூபாய் 10.37 வழங்கப்பட்டு உள்ளது. முவுதானா கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு  ரூ. 40 ஆயிரம் கடனுக்கு ரூ. 215 வழங்கப்பட்டு உள்ளது. 

உத்தரபிரதேச மாநில மந்திரி மன்னு கோரி தலைமையில் நடந்த விழாவில் இந்த சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மாநில அரசு ரூ. 10 மற்றும் ரூ. 215 மற்றும் 19 பைசாவிற்கு சான்றிதழ் வங்கியது பெரும் அதிர்ச்சியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது, ஆனால் இதுபோன்று மிகவும் சிறிய தொகைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு விவசாயி சிவபால் பேசுகையில், வங்கியில் இருந்து ரூ. 93 ஆயிரம் விவசாய கடன் வாங்கியிருந்தேன், ஆனால் ரூபாய் 20,271 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது, நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவானது,”என்றார். உத்தரபிரதேச மாநில அரசின் விவசாய கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் ஆரவாரத்துடன் கலந்துக் கொண்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது.

மந்திரி மன்னு கோரி பேசுகையில் சான்றிதழில் பிரிண்டிங் தவறு ஏற்பட்டு உள்ளது. புகார்கள் அதிகரித்து உள்ளது, இப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.  “விசாயகடன் தள்ளுபடி திட்ட விதிகளின்படி கொடுக்கப்படுகிறது. அதில் முரண்பாடு இருந்தால், விசாரணை நடத்தப்படும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இது விவசாயிகளை பரிகாசம் செய்வது என சமாஜ்வாடி விமர்சனம் செய்து உள்ளது.

எடாவக் மாவட்ட விவசாயி ஈஸ்வர் தயாளுக்கு மாவட்ட அதிகாரிகள் 19 பைசா தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை கொடுத்து உள்ளனர். மாவட்ட தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ் வங்கப்பட்டு உள்ளது. ராமா நாந்த் என்ற விவசாயி ரூ.  1.79க்கும், விவசாயி முன்னி லால் போகிக்கு ரூ. 2-க்கும் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் வாங்கிஉள்ளனர். விவசாயிகள் கடும் கோபம் அடைந்து உள்ளனர். பல விவசாயிகளுக்கு இதுபோன்ற மிகவும் குறைந்த தொகைக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Next Story