தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு பெண் தொழில் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் + "||" + Augustawestland chargesheet on Shivani

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு பெண் தொழில் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு
பெண் தொழில் அதிபர் மீது 
குற்றப்பத்திரிகை தாக்கல்
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் பெண் தொழில் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னையில் கைதானவர் என்பது குறிபிடத்தக்கது.
புதுடெல்லி

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டிற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த பேரத்தில், லஞ்சப்பணம் துபாயை சேர்ந்த சக்சேனா, மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் வழியாக கைமாறியதும், சொத்துகளாக வாங்கி குவிக்கப்பட்டதும் தெரிய வந்தது. 

எனவே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டப்படி அமலாக்கப்பிரிவு 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இதில், மேற்கண்ட துபாய் நிறுவனங்களின் பெண் இயக்குனர் ஷிவானி சக்சேனா, கடந்த ஜூலை 17-ந் தேதி சென்னையில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்நிலையில், அவர் மீதும், அவருடைய 2 துபாய் நிறுவனங்கள் மீதும் அமலாக்கப்பிரிவு நேற்று டெல்லி தனிக்கோர்ட்டில் நீதிபதி அரவிந்த் குமார் முன்பு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை 19-ந் தேதி கோர்ட்டு பரிசீலிக்க உள்ளது.