வயநாடு பகுதியில் தொடர் கனமழை எதிரொலி கபினி அணை நிரம்பியது


வயநாடு பகுதியில் தொடர் கனமழை எதிரொலி கபினி அணை நிரம்பியது
x
தினத்தந்தி 20 Sep 2017 12:00 AM GMT (Updated: 2017-09-20T00:22:40+05:30)

வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பியுள்ளது.

மைசூரு,

வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பியுள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கபினி அணை தனது முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 2,282.50 அடி தண்ணீர் உள்ளது. அணையின் பாதுகாப்புக்காக 2 அடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியதால், கபினி அணை நிரம்பவில்லை. இதனால் கபினி அணையை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு மழை தாமதமாக வந்தாலும், தொடர்ந்து கனமழை பெய்ததால், கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை நிரம்பி உள்ளதால், பாரம்பரிய முறைப்படி கபினி அணைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது.

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நாளை (வியாழக்கிழமை) மைசூரு வருகிறார். தசரா விழாவை தொடங்கி வைத்துவிட்டு அவர், கபினி அணைக்கு வந்து சிறப்பு பூஜை செய்கிறார். கபினி அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படலாம். இதனால் கபினி கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மற்றொரு முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாமலும், திடீர் கனமழையும் காணப்படுகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கே.ஆர்.எஸ். நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டியதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வினாடிக்கு 5,561 கனஅடி வந்து கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,248 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணையில் நேற்று முன்தினம் 101.95 அடி இருந்த நீரின் அளவு, நேற்று 102.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8,204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

Next Story