ஐதராபாத்தில் திருமணம் என்ற பெயரில் அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை விற்கும் கும்பல் சிக்கியது


ஐதராபாத்தில் திருமணம் என்ற பெயரில் அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை விற்கும் கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 20 Sep 2017 10:58 AM GMT (Updated: 2017-09-20T16:46:06+05:30)

ஐதராபாத்தில் பணத்திற்காக அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை போலீஸ் பிடித்து உள்ளது.

ஐதராபாத், 

ஐதராபாத்தில் சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் கூட ஓமன் நாட்டை சேர்ந்த  65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ. 5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட வெளி உலகிற்கு தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்த போதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.  

இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தியதில் ஐதராபாத் நகரில் சிறுமிகளை அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் கும்பல் சிக்கி உள்ளது. ஐதராபாத் போலீஸ் இவ்விவகாரத்தில் 5 ஓமன் நாட்டவர்கள், 3 கத்தார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளை கைது செய்து உள்ளது. திருமணம் செய்து வைக்கும் மத குருக்கள் போலியான திருமண சான்றிதழ் தயார் செய்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சிறுமிகள் திருமணம் தொடர்பாக தகவல் கிடைத்து ஐதராபாத் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் ஷேக் திருமண கும்பல் வசமாக சிக்கிஉள்ளது. 

இவ்விவகாரத்தில் போலீஸ் 35 முகவர்களை அடையாளம் கண்டு உள்ளது, இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் தெரியவந்து உள்ளது. ஐதராபாத் முதல் அரபு நாடுகள் வரையில் நீடித்திருக்கும் நெட்வோர்க் கும்பலானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி பேசுகையில், ஐதராபாத் நகரில் நாங்கள் இரு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டோம், 20 பேரை கைது செய்து உள்ளோம். சிறுமிகள் திருமணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவலின் பெயரில் எங்களுடைய சோதனையை தொடங்கினோம். சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளனர். 12 சிறுமிகள் இந்த கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். 

துணை கமிஷ்னர் வி சத்தியநாராயணா பேசுகையில், இந்த கும்பல் மைனர் சிறுமிகள் உள்ள ஏழை குடும்பங்களை குறிவைத்து உள்ளது. அவர்கள் அரபு நாடுகளுக்கு அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறியும், பணம் வழங்குவதாக கூறியும் ஏமாற்றி உள்ளனர். அரபு நாடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக சிறுமிகள் வாழலாம் எனவும் ஏமாற்றிஉள்ளனர். சிறுமிகளை திருமணம் செய்ய அரபு நாட்டவர்கள் சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் செலவு செய்து உள்ளனர். பணம் முகவர்கள் மற்றும் திருமணம் செய்துவைக்கும்  மத குருக்களால் பெறப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 16 வயது சிறுமியை பணம் கொடுத்து திருமணம் செய்ய 77 வயது ஓமன் முதியவரை ஐதராபாத் போலீஸ் கைது செய்தது.

அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் விற்பனை செய்யும் கும்பல் ஐதராபாத் மற்றும் அரபு நாடுகளில் புரோக்கர்களாக செயல்பட்டு உள்ளது. சிறுமிகளுக்கு போலியான வயது சான்றிதழ், பாஸ்போர்ட் என அனைத்தையும் பெற்று, சிறுமிகளை அரபு நாட்டவர்களுடன் அனுப்பி வைக்கும் வரையில் அனைத்து வேலையையும் இந்த புரோக்கர்கள் பார்க்கிறார்கள். அரபு நாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சிறுமிகளுடன் தங்குவதற்கும் வீடுகளையும், ஓட்டல்களையும் ஏற்பாடு செய்கின்றனர் எனவும் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பான விசாரணையில் மேலும் அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2015-ல் ஐதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் 5, 6 சிறுமிகள் அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலநிலை காணப்படுகிறது என போலீஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story