மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகல், பா.ஜனதாவில் இணைய வாய்ப்பு


மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகல், பா.ஜனதாவில் இணைய வாய்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2017 1:11 PM GMT (Updated: 21 Sep 2017 1:10 PM GMT)

மராட்டிய மாநில முன்னாள் முதல்–மந்திரி நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.



மும்பை, 

காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் காங்கிரசில் சேர்ந்தபோது, என்னை 6 மாதத்தில் முதல்–மந்திரியாக ஆக்குவதாக கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் உறுதியளித்தார். 

மேடமும் கூட (சோனியா காந்தி) இதை இரண்டு முறை என்னிடம் கூறினார். இதற்காக 12 ஆண்டுகள் காத்திருந்து பார்த்தேன். இருந்தாலும், இதுநாள் வரை அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கட்சியில் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவும் இல்லை. ஆகையால், நான் காங்கிரசில் இருந்து விலகுகிறேன். அதோடு காங்கிரஸ் சார்பில் வகிக்கும் மராட்டிய மேல்–சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியையும் ராஜினாமா செய்கிறேன். என்னுடைய மகன் நிலேஷ் ரானேயும் காங்கிரசில் இருந்து விலகுகிறார் என கூறிஉள்ளார். 

மராட்டியத்தில் கடந்த 1999–ம் ஆண்டு சிவசேனா தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது, நாராயண் ரானே முதல்–மந்திரியாக இருந்தவர். உத்தவ் தாக்கரேயின் நிர்வாகத்திறன் குறித்து பகிரங்கமாக விமர்சனம் காரணமாக கடந்த 2005–ம் ஆண்டு ஜூலை மாதம் சிவசேனாவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது, மராட்டியத்தில் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்ததால் அவருக்கு வருவாய்த்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதோடு, காங்கிரசின் மூத்த தலைவர் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றார். 

அதன்பின்னர், 2009–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், நாராயண் ரானே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அத்துடன், வருவாய் மற்றும் தொழில்துறை மந்திரியாக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். இந்தநிலையில், கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பாரதீய ஜனதா– சிவசேனா கூட்டணி ஆட்சி மலர்ந்தது. இதனையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகிய அவர், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவானின் செயல்பாட்டை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கச் செய்தார். இப்போது கட்சியிலிருந்து விலகிவிட்டார்.  

இப்போது காங்கிரசில் இருந்து விலகி உள்ளார். அவரிடம் நீங்கள் பா.ஜனதாவில் சேர போவதாக ஊகம் வெளியாகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அடுத்து எங்கே செல்வது என்று இன்னமும் நான் முடிவு எடுக்கவில்லை’’ என்று அவர் பதில் அளித்தார். நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே65 வயது நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைய போவதாக தகவல் வெளியானது. அவர் பாரதீய ஜனதாவில் இணைய வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story