மூளை சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உறுப்புகளால் 3 பேருக்கு புது வாழ்வு


மூளை சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உறுப்புகளால் 3 பேருக்கு புது வாழ்வு
x
தினத்தந்தி 21 Sep 2017 2:34 PM GMT (Updated: 21 Sep 2017 2:34 PM GMT)

மகாராஷ்டிராவில் மூளை சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உறுப்புகள் 3 பேருக்கு புதிய வாழ்வை அளித்துள்ளது.

நாசிக்,

நாசிக் நகரில் பந்துர்லி கிராமத்தில் வசித்து வந்த சிறுமி தேஜாஸ்ரீ செல்கி.  இவர் பள்ளி கூடத்தில் 4ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ந்தேதி பள்ளி கூடத்தில் திடீரென சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

அவர் உடனடியாக அட்காவன் நகரில் உள்ள வசந்த்ராவ் பவார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வந்த நிலையில், சில சிக்கல்கள் ஏற்பட்டதனை தொடர்ந்து மூளைக்கு அனுப்பப்பட்டு வந்த பிராணவாயு நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமி மூளை சாவு அடைந்து விட்டாள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்தினர் அவரது முக்கிய உறுப்புகளை தானம் அளிப்பது என முடிவு செய்தனர்.  இதனை அடுத்து அவர்கள் ஹிரிஷிகேஷ் என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.  அங்கிருந்து போலீசாரின் உதவியுடன் மும்பை, புனே மற்றும் சோலாப்பூர் நகரங்களில் உள்ள நோயாளிகளுக்கு அவரது உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன.

மும்பையில் பலத்த மழைக்கு இடையே கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் இருதயம் 7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமுடன் பொருத்தப்பட்டது.  புனே நகரில் நோயாளி ஒருவருக்கு சிறுமியின் கல்லீரல் பொருத்தப்பட்டது.  சோலாப்பூரில் நோயாளி ஒருவருக்கு சிறுமியின் சிறுநீரகங்களில் ஒன்று பொருத்தப்பட்டது.


Next Story