எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பொதுக்குழு தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறார்கள்


எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பொதுக்குழு தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறார்கள்
x
தினத்தந்தி 22 Sep 2017 5:16 AM GMT (Updated: 2017-09-22T10:46:12+05:30)

தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் உள்ளிட்டோர் பொதுக்குழு தீர்மான நகலை இன்று காலை 11 மணிக்கு அளிக்கின்றனர்.

புதுடெல்லி

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பொதுக்குழு தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறார்கள்

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால் அக்கட்சியின் பெயரையும், தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

என்றாலும் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்றும் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையிலான அணியினரும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் தனித்தனியாக மனுக்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன. சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார்கள். அதில் இரட்டை இலை சின்னம் மீட்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதில் சசிகலா நியமனத்தை ரத்து செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தற்போது  பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்களை இன்று எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.

இதற்காக  எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த அமைச்சர்கள் ஜெயக்குமார் , சண்முகம்  கே.பி. முனுசாமி,  மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி சென்று உள்ளனர். தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம்  உள்ளிட்டோர் பொதுக்குழு தீர்மான நகலை இன்று காலை 11 மணிக்கு அளிக்கின்றனர்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலை சின்னம் 100 சதவிகிதம் தங்களுக்கே கிடைக்கும் என கூறினார்.

கே.பி.முனுசாமி கூறும் போது இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித்தருமாறு கேட்போம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்ப்பிப்போம் என கூறினார்.

Next Story