இரு அணிகளாக இருந்த போது தாக்கல் செய்த அனைத்து பிரமாண பத்திரங்களையும் வாபஸ் பெறுகிறோம்: ஈபிஎஸ் அணி தகவல்


இரு அணிகளாக இருந்த போது தாக்கல் செய்த அனைத்து பிரமாண பத்திரங்களையும் வாபஸ் பெறுகிறோம்: ஈபிஎஸ் அணி தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2017 7:53 AM GMT (Updated: 2017-09-22T13:23:32+05:30)

அதிமுக கட்சி, சின்னம் எங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர்.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகு கடந்த 12-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார்கள்.
இதில் பொதுச்செயலாளர் சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்றனர். கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த தீர்மானங்களை தேர்தல் கமி‌ஷனில் சமர்ப்பிக்கவும், கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னத்தை பெற தேவையான ஆவணங்களை வழங்கவும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதய குமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றனர். பகல் 12.30 மணிக்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை நேரில் சென்று பொதுக்குழு தீர்மான ஆவணங்களை தாக்கல் செய்தனர். 

தேர்தல் ஆணையத்தில்  ஒபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் இணைந்து தாக்கல் செய்துள்ள கடிதத்தில், அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம்  என்றும் அணிகள் இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்துவிட்டதால், கட்சி சின்னத்தில் எங்களுக்கே உரிமை எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், இரு அணிகளாக இருந்த போது தாக்கல் செய்த அனைத்து பிரமாண பத்திரங்களையும் வாபஸ் பெறுகிறோம் எனவும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் முதலமைச்சர் அணி தெரிவித்துள்ளது.  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இறுதியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முதல் அமைச்சர் அணியினர் தெரிவித்துள்ளனர். 

Next Story