பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதல், எல்லை கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்


பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதல், எல்லை கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 22 Sep 2017 8:34 AM GMT (Updated: 22 Sep 2017 10:43 AM GMT)

இந்தியா எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என பாகிஸ்தான் கூறிஉள்ளது.

இஸ்லாமாபாத்,


ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் அமைதி நிலவும் போது எல்லாம் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடியால் எல்லையில் உயிரிழப்பு மற்றும் பொதுமக்கள் காயம் அடையும் சம்பவங்கள் நேரிட்டு வருகிறது. நேற்று இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டதில் எல்லை கிராமங்களை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர். 

இதனையடுத்து எல்லையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை தொடர்ச்சியாக கொண்டு உள்ளநிலையில், கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்படுகின்றனர். 

அர்னியா, ஆர்.எஸ். புரா மற்றும் ராம்கார்க் செக்டாரில் வசிக்கும் கிராம வாசிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பிற எல்லை கிராமங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாரம் முழுவதும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று மட்டும் எல்லையில் 15 நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது, இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது.

இந்நிலையில் இந்தியா எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும், தங்கள் தரப்பில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் பாகிஸ்தான் கூறிஉள்ளது.

இந்தியப் படைகள் எல்லையில் சாப்பார், சார்வாக் மற்றும் ஹர்பால் செக்டாரில் அத்துமீறி கடும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. இதில் எல்லைக் கிராமங்களில் வசித்துவரும் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியாகி உள்ளனர்,  26 பேர் காயம் அடைந்து உள்ளனர் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் கூறிஉள்ளார். இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் சாகித் ககான் அப்பாஸி கண்டனம் தெரிவித்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story