துர்கா சிலைகளை கரைக்கும் முன் அனுமதி பெறவேண்டும்: மம்தா பானர்ஜி கட்டுப்பாடு


துர்கா சிலைகளை கரைக்கும் முன் அனுமதி பெறவேண்டும்: மம்தா பானர்ஜி கட்டுப்பாடு
x
தினத்தந்தி 22 Sep 2017 9:59 AM GMT (Updated: 2017-09-22T15:29:16+05:30)

துர்கா சிலைகளை கரைக்கும் முன் அனுமதி பெறவேண்டும் என்று மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு முஸ்லீம்களின் பண்டிகையான மொகரமும், இந்துக்களின் பண்டிகையுமான துர்கா பூஜாவும் வரும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே நாளில் வர இருக்கிறது. இதன் காரணமாக மதம் சார்ந்த மோதல்கள் தலை தூக்கும் என்ற காரணத்திற்காக துர்கா சிலைகளை கரைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அரசின் இந்த முடிவு இந்து மதத்தினரின் சம்பிரதாயத்திற்கு தடை போடுவதாகவும், முஸ்லீம் மதத்தினரின் வாக்குவங்கியை ஈர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் சென்றது.  

விசாரணையின் போது மம்தாவின் உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ம் தேதி மொகாரம் அன்று துர்கா சிலைகளை கரைக்க தடையில்லை என்றது. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பண்டிகையை ஒன்றாக கொண்டாட அனுமதியுங்கள் என்ற உயர் நீதிமன்றம், இரு பிரிவுக்கு இடையே எல்லையை வகுக்காதீர் என்றது. மேலும், மொகரம் ஊர்வலம் மற்றும் துர்கா பூஜை நிகழ்ச்சி ஊர்வலமும் தனித்தனியான பாதைகளில் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும், நள்ளிரவு 12 மணி வரை அனைத்து தினமும் துர்கா சிலைகளை கரைக்கலாம் என உத்தரவிட்டது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து  உடனடியாக மூத்த அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, அக்டோபர் 1 ஆம் தேதி, துர்கா சிலைகளை கரைப்பதற்கு முன் பூஜா குழுவினர் போலீசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று உத்தரவிட்டார். 


Next Story