இயற்கை பேரழிவு மேலாண்மை முகமைகளின் ஒருங்கிணைப்பு முக்கியம் - ரிஜ்ஜூ


இயற்கை பேரழிவு மேலாண்மை முகமைகளின் ஒருங்கிணைப்பு முக்கியம் - ரிஜ்ஜூ
x
தினத்தந்தி 22 Sep 2017 10:16 AM GMT (Updated: 22 Sep 2017 10:16 AM GMT)

இயற்கைப் பேரழிவுகளை சமாளிக்க பல்வேறு முகமைகளின் இடையே ஒத்துழைப்பு தேவை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிர்ரென் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

ஹைதராபாத்

நாட்டின் மேம்பாடு தடைப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நாட்டின் இயற்கைப் பேரழிவுகளை திறமையாக கையாளத் தெரிய வேண்டும் என்று கூறினார் அமைச்சர். உள்துறை அமைச்சகத்தில் இயற்கைப் பேரழிவுகளை கையாளும் பிரிவிற்கு தலைமை வகிக்கிறார் கிர்ரென் ரிஜ்ஜூ.

“இந்தியாவெங்கும் இயற்கைப் பேரழிவுகள் நிகழும் தன்மை நிறைய இருக்கிறது. பெரிய தீபகற்பம், இமயமலைத்தொடர், அடர்க்காடுகள், மேற்குப் பகுதியின் பாலைவனம் ஆகியன இயற்கைப் பேரழிகளுக்கு எளிதாக உட்படக்கூடியவை. இந்தியா சிறந்த வளர்ச்சியை பெற வேண்டுமென்றால்  இத்தகைய தடைகளை சந்திக்க வேண்டும்” என்றார் ரிஜ்ஜூ.

ஹைதராபாத்திலுள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கல்லூரி பிரதமர் மோடியின் தலைமையில் இயங்குகிறது. நாட்டில் ஏற்படுத்தப்படும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும் பொருத்தமான இயற்கைப் பேரழிவு மேலாண்மை தரக்கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் என்றார் ரிஜ்ஜூ.

மத்திய உள்துறை அமைச்சகமானது இயற்கை பேரழிவிலிருந்து இயற்கை பேரழிவுத் தடுப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு பேரழிவுகளை சமாளிக்கும் திறன் பெற்றிருந்தாலும் தொடர்புடைய முகமைகளுக்கு இடையே ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர். பேரழிவுகள் நிகழும் போது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவது முக்கியமானது. இதன் மூலம் சேதாரங்களை குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளை ஹைதராபாத்தின் ஹூசைன் சாகர் ஏரியில் ”பிரளய் சகாயம்” என்று பெயரிடப்பட்ட பயிற்சி ஒத்திகை ஒன்று தெலுங்கானா மாநில அரசின் உதவியுடன் நடத்தப்படவுள்ளது. இதில் ராணுவம் உட்பட பேரழிவு மீட்பு முகமைகள் கலந்து கொள்ளவுள்ளன. 


Next Story