தாவூத் இப்ராகிம்மின் மனைவி இந்தியாவிற்கு வந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது


தாவூத் இப்ராகிம்மின் மனைவி இந்தியாவிற்கு வந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
x
தினத்தந்தி 22 Sep 2017 10:35 AM GMT (Updated: 2017-09-22T16:05:36+05:30)

தாவூத் இப்ராகிம்மின் மனைவி இந்தியாவிற்கு வந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.


மும்பை,

மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் (வயது 59). முக்கிய சதிகாரரான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்ததில் இருந்து சி.பி.ஐ. தேடி வருகிறது. தாவூத் இப்ராகிம்மை சர்வதேச தீவிரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கட்டுமான அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸ் கைது செய்தது.

தானே போலீஸ் இக்பால் கஸ்கரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையின் போது தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என இக்பால் கஸ்கர் கூறியதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது. விசாரணையின் போது கராச்சியில் தாவூத் இப்ராகிம் வசிக்கும் 4 இடங்களின் முகவரியை கஸ்கர் கூறியதாகவும் தெரியவந்து உள்ளது. இப்போது கிடைக்கப்பெற்று உள்ள தகவல்களை, ஏற்கனவே தாவூத் இப்ராகிம் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐயிடம் தெரிவிக்க போலீஸ் திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே தாவூத் இப்ராகிம் இருப்பிடம் தொடர்பாக விசாரணை முகமைகள் கொண்டு உள்ள தகவல்களும், இப்போது கிடைத்து உள்ள தகவல்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பதை பார்க்க முயற்சி செய்யப்படுகிறது. விரைவில் சிபிஐயும் இவ்விசாரணையில் இணைய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் உடன் வசித்துவரும் அவருடைய மனைவி இந்தியாவிற்கு வந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. 

தாவூத் இப்ராகிம் மனைவி மெஹ்ஜாபின் கடந்த வருடம் மும்பை வந்து தன்னுடைய தந்தையை பார்த்து சென்று உள்ளார் என இக்பால் கஸ்கரை விசாரணை செய்துவரும் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டு உள்ளார். 

Next Story