எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைக்கிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு


எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைக்கிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Sep 2017 11:40 AM GMT (Updated: 22 Sep 2017 11:39 AM GMT)

எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டிஉள்ளது.


புதுடெல்லி,

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் போது எல்லாம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை கிராமங்களை குறிவைத்தும், இந்திய நிலைகளை குறிவைத்தும் அடாவடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் எங்கள் நாட்டை சேர்ந்த கிராம மக்கள் 6 பேர் உயிரிழந்து உள்ளனர், 27 பேர் காயம் அடைந்து உள்ளனர் என பாகிஸ்தான் கூறிஉள்ளது.

இந்நிலையில் எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டிஉள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் (டிஜிஎம்ஓ) இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் போது, இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் உரிமை உள்ளது என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடியை கொடுத்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என பாகிஸ்தான் டிஜிஎம்ஓ மேஜர் ஜெனரல் ஷாகிர் சாம்ஷாத் மிர்சா குற்றம் சாட்டிஉள்ளார் என இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் எப்பகுதியில் இருந்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்பகுதியை நோக்கியே இந்தியப் படைகள் பதிலடியை கொடுக்கிறது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 “இந்திய படைகள் பாகிஸ்தான் கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டு உள்ளது. அமிர்தசரஸ் செக்டாரில் பாகிஸ்தான் செக்டாருக்கு மிகவும் நெருங்கிய பகுதியில் இருந்து இந்தியாவிற்கு ஆயுதங்களுடன் ஊருவ முயன்றவர்கள் மீதே எல்லைப் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் எல்லையில் ஊடுருவல் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது,” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story