எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு


எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது -  பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2017 1:38 PM GMT (Updated: 2017-09-22T19:08:07+05:30)

எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வாரணாசி,

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வாரணாசிக்கு சென்றார். வாரணாசி சென்ற பிரதமர் மோடியை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். 

இந்தநிலையில் படா லால்பூரில் கைவினைப்பொருட்களுக்காக 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீந்தயாள் ஹஸ்தகலா சன்குல் அருங்காட்சியக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து வாரணாசியில் இருந்து குஜராத் மாநிலத்தின் வதோதரா வரை இயக்கப்பட உள்ள 3-வது மஹாமனா விரைவு ரெயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

வாரணாசியில் 1000 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்துள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட பணிகளின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். 

அதனைதொடர்ந்து அம்பேத்கார் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

உத்தரபிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுகின்றோம்.  காலம் முடிந்த பல திட்டங்களை முடிப்பதற்காக கையில் எடுத்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

வாரணாசியில் ஏராளமான நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நான் நன்றி கடன் பட்டுள்ளேன். கைவினைப் பொருட்களுக்கான கட்டிடம், சிறிய கலைஞர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை கனிசமாக அதிகரிக்கும்.  எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பாராட்டுகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்தவிழாவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஸ்ரீராம் நாயக், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story