திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 22 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-23T01:28:43+05:30)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

திருமலை,

திருப்பதியில் ஏழுமலைகள் மீது கோவில் கொண்டுள்ள இறைவன் ஏழுமலையான், வெங்கடாஜலபதி, திருவேங்கடவன், மலையப்பசாமி எனப் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். திருமலை எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் திருவிழாபோல் காட்சி அளிக்கும் என்றாலும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

புரட்டாசி திருவோணம் திருவேங்கடவனின் பிறந்த நட்சத்திரமாக தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது. இந்தத் திருவோணத் தினத்துக்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில் விசே‌ஷ அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். திருமலையில் ஏழுமலையானுக்கு பிறப்பு கடவுளான ‘பிரம்மன்’ தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். எனவே பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம், பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக இன்று தொடங்குகிறது. இன்று மாலை 5.48 மணியில் இருந்து 6 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றமும்(துவாஜாரோகணம்), அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரிய சே‌ஷ வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக 27–ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருடவாகன (கருடசேவை) வீதிஉலா நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான அக்டோபர் மாதம் 1–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணிவரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம், உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவையும், காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்குள் கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.


Next Story