முந்தைய ஆட்சியாளர்கள் பொது பணத்தை கொள்ளையடித்தனர் பிரதமர் குற்றச்சாட்டு


முந்தைய ஆட்சியாளர்கள் பொது பணத்தை கொள்ளையடித்தனர் பிரதமர்  குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Sep 2017 12:00 AM GMT (Updated: 2017-09-23T01:49:19+05:30)

முந்தைய ஆட்சியாளர்கள் அரசியல் கணக்கு போட்டு செயல்பட்டனர், பொது பணத்தை கொள்ளையடித்தனர் என்று வாரணாசியில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்றார். அங்கு ரூ.1,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வாரணாசிக்கும், குஜராத் மாநிலம் வதோதராவுக்கும் இடையிலான மகாத்மா எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது:–

நான் கடந்த பாராளுமன்ற தேர்தலில், வாரணாசி, வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றேன். பிறகு வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தேன். ஏனென்றால், அங்கு வளர்ச்சியை கவனிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். வாரணாசியின் வளர்ச்சியை நானே கவனிப்பது என்று முடிவு செய்தேன்.

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு வளர்ச்சியே தீர்வு. நாடு தற்போது வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஏழைகளும், நடுத்தர மக்களும் பலனடைந்து வருகிறார்கள்.

ஆனால், முந்தைய ஆட்சியாளர்கள், வளர்ச்சியையே வெறுத்தனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பொது பணத்தை கொள்ளையடித்தனர்.

அவர்கள் அரசியல் கணக்கு போட்டு செயல்பட்டனர். திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டினர், ஆனால் அவற்றை முடிக்கவில்லை. ஆனால், நாங்கள் திட்டங்களை தொடங்குவது மட்டுமின்றி, அவற்றை முடித்து திறந்து வைத்து வருகிறோம்.

எந்த ஏழையும், தனது வாரிசுகளுக்கு வறுமையை அளிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அவர்களின் கனவுகளை அரசு உணர்ந்துள்ளது. எனவே, வறுமையை ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story